அனுமன் பஜனை விவகாரம்; எம்.பி. நவ்னீத், எம்.எல்.ஏ. கணவர் கைது


அனுமன் பஜனை விவகாரம்; எம்.பி. நவ்னீத், எம்.எல்.ஏ. கணவர் கைது
x
தினத்தந்தி 23 April 2022 7:19 PM IST (Updated: 23 April 2022 7:19 PM IST)
t-max-icont-min-icon

சிவசேனா தொண்டர்கள் மட்டுமல்லாமல் மராட்டிய முதல்-மந்திரியின் குண்டர்களாகவும் உள்ளனர் என நவ்னீத் ராணா எம்.பி. கூறியுள்ளார்.



மும்பை,



மராட்டியத்தில் அமராவதியில் உள்ள பட்னேரா சட்டசபை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரவி ரானா.  3வது முறையாக எம்.எல்.ஏ.வாக உள்ள இவரது மனைவி நவ்னீத் ரானாவும் சுயேச்சை எம்.பி.யாக உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், மும்பை பாந்திராவில் உள்ள மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லம் முன் அனுமன் பஜனை பாட இருக்கிறோம் என ரவி மற்றும் நவ்னீத் தம்பதி கூறினர். இதற்கு சிவசேனாவினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

எனினும் முதல்-மந்திரி வீட்டின் முன் பஜனை பாடுவதில் உறுதியாக இருப்பதாக ரவி ரானா கூறினார்.  இதனையடுத்து, உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக மாதோஸ்ரீ வீட்டின் அருகில் சிவசேனாவினர் அதிகளவில் திரண்டனர். 

ரவி மற்றும் நவ்னீத் ரானாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள் அவர்கள் இருவரும் மாதோஸ்ரீ அருகில் வந்தால் தக்க பாடம் புகட்டப்படும் என்றனர்.

இந்த நிலையில் வீட்டை விட்டு இரவில் வெளியே வந்த உத்தவ் தாக்கரே, மாதோஸ்ரீக்கு வரும் தைரியம் யாருக்கும் கிடையாது என கூறி தொண்டர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கேட்டு கொண்டார்.

இதேபோன்று, மும்பையில் உள்ள ரவி மற்றும் நவ்னீத் வீட்டின் முன் கும்பல் ஒன்று கொடிகளை ஆட்டியபடி கோஷங்களை எழுப்பியபடி இருந்தன என்று அந்த தம்பதி குற்றச்சாட்டு கூறியுள்ளது.  முதல்-மந்திரி வீட்டுக்கு செல்லாமல் தடுக்கும் நோக்குடன் அவர்கள் செயல்பட்டனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடித்த நிலையில், ரவி-நவ்னீத் தம்பதி இன்று கூறும்போது, எங்களுடைய வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிவசேனா தொண்டர்கள் மட்டுமல்ல.  அவர்கள், மராட்டிய முதல்-மந்திரியின் குண்டர்கள்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு மட்டுமே மக்களுக்கு எதிராக எப்படி குற்றச்சாட்டு வழக்குகளை பதிவு செய்ய முடியும் என்றும் அவர்களை சிறையில் தள்ள முடியும் என்றும் தெரியும்.  மராட்டியத்தில் மேற்கு வங்காளம் போன்ற சூழலை அவர் உருவாக்கி வருகிறார் என்று நவ்னீத் கூறினார்.

இந்நிலையில், அவர்கள் இருவர் மீதும் பாம்பே போலீஸ் சட்டத்தின்படி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  வழக்கு ஒன்றும் பதிவாகி உள்ளது.  அவர்களுடைய வீட்டில் இருந்து இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  மக்களை தூண்டி விடும் வகையில் பேசியதற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.


Next Story