எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்பட இந்தியா தயங்காது; ராஜ்நாத் சிங் பேச்சு
எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்பட இந்தியா தயங்காது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கூறியுள்ளார்.
கவுகாத்தி,
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 1971ம் ஆண்டு நடந்த போரில் பெற்ற வெற்றியை உறுதி செய்த வீரர்களை கவுரவிக்கும் வகையில்
அசாமின் கவுகாத்தி நகரில் நிகழ்ச்சி ஒன்றிற்கு அசாம் அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொண்டார்.
அவர் நிகழ்ச்சியில், தி பிரேவ்ஹார்ட்ஸ் ஆஃப் 1971 என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டு பேசினார். அவர் பேசும்போது, அனைத்து வடிவங்களிலான பயங்கரவாதத்தினையும் அழித்தொழிக்க நாங்கள் உறுதியானதொரு நிலைப்பாட்டினை எடுத்துள்ளோம். அந்த தீங்கில் இருந்து எங்களது குடிமக்களை நாங்கள் காத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
தேவைப்பட்டால், எல்லையில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதமும் அழிக்கப்படும். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க தைரியமிக்க முடிவுகளை எடுக்க அரசு ஒருபோதும் தயங்காது.
எல்லை பகுதிக்கு வெளியில் இருந்து இந்தியாவை தாக்கினால், எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்பட நாங்கள் தயங்கமாட்டோம். பயங்கரவாதத்தினை நாங்கள் வலிமையாக எதிர்கொள்ள முடியும் என்று முன்பே தெரிவித்து இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, வீரர்களின் தியாகத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் மற்றும் அதனை ஈடு செய்யும் வகையில் அவர்களது உறவினர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகை, அரசு வேலையில் 2 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு இடஒதுக்கீடு போன்றவற்றை வழங்குவதற்கான முயற்சிகளில் தனது அரசு ஈடுபட்டு உள்ளது என்று பேசியுள்ளார்.
Related Tags :
Next Story