சென்னை வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு


சென்னை வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
x

உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை,

உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையம் செல்கிறார். அங்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியினர் வரவேற்கின்றனர். 

அதைத்தொடர்ந்து கார் மூலம் ஈஸ்வரன்கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்துக்கு வருகிறார். பாரதியார் நினைவு இல்லத்தை சுற்றிப்பார்க்கும் அவர் பாரதியார் படத்துக்கு மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து அரவிந்தர் ஆசிரமத்துக்குச் செல்கிறார். அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு காலாப்பட்டு பல்கலைக்கழக கன்வென்சன் சென்டருக்கு செல்கிறார்.
 
அங்கு அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் அமித்ஷா கலந்துகொள்கிறார். மேலும் புதுவை பல்கலைக்கழகத்தில் ரூ.48 கோடி செலவில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிற்பகலில் இந்திராகாந்தி சிலை அருகே உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகம் செல்லும் அமித்ஷா, புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
அங்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல் முருகன் ஆகியோர் அமித்ஷாவை வரவேற்றனர். 

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அமித்ஷா சிறிது தூரம் நடந்தார். அங்கு கூடியிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story