மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் மீது யெஸ் வங்கியின் ராணா கபூர் சாமர்த்தியமாக குற்றம் சாட்டியுள்ளார் - காங்கிரஸ் தலைவர்


மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் மீது யெஸ் வங்கியின் ராணா கபூர் சாமர்த்தியமாக குற்றம் சாட்டியுள்ளார் - காங்கிரஸ் தலைவர்
x
தினத்தந்தி 24 April 2022 8:17 AM GMT (Updated: 24 April 2022 8:17 AM GMT)

பிரியங்கா காந்தி வத்ராவிடமிருந்து எம்.எப்.உசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கும்படி, அப்போதைய மறைந்த முரளி தியோராவால் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

மும்பை,

பணமோசடி வழக்கில்  மார்ச் 2020 இல் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கியின் நிறுவனரும் அதன் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராணா கபூர்  தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மூலம் ராணா கபூர், யெஸ் வங்கியின் இணை நிறுவனர், அவரது குடும்பத்தினர், திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (டி.ஹச்.எப்.எல்) விளம்பரதாரர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர்  ரூ.5,050 கோடி மதிப்பிலான நிதியை மோசடி செய்ததாக அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றம் சாட்டியுள்ளது.

சமீபத்தில்  அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையின் படி, யெஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூர் தெரிவித்திருப்பதாவது:-

“காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவிடமிருந்து எம்.எப்.உசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கும்படி, அப்போதைய பெட்ரோலிய துறை மந்திரி மறைந்த முரளி தியோராவால் கட்டாயப்படுத்தப்பட்டேன். 

நான் அப்படி செய்தால், எனக்கு பத்ம பூஷன் விருது பெற அது உதவும் என்று கூறப்பட்டதால் அதனை நம்பி நான் பணம் கொடுத்தேன்.

ஆனால், முரளி தியோரா அவருக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு மாறாக, எம்.எப் உசேன் ஓவியத்திற்கான காசோலையாக நான் செலுத்திய ரூ.2 கோடி, நியூயார்க்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை முடிப்பதற்கான சம்பிரதாயங்கள் பிரியங்கா காந்தி வத்ராவின் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் நான் அப்போது சந்தித்ததில்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் தலைவர் ஒருவர் பதில் அளித்துள்ளார். 

அவர் கூறியிருப்பதாவது:- “ராணா கபூர் உயிருடன் இல்லாதவர்களை சாமர்த்தியமாக குற்றம் சாட்டியுள்ளார். ரூ.5000 கோடி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்?” என்று கூறினார்.

Next Story