“காங்கிரஸ் தலைவர்களால் ராணா கபூர் மிரட்டப்பட்டுள்ளார்” - பாஜக குற்றச்சாட்டு
பிரியங்கா காந்தி வத்ராவிடம் இருந்து ரூ.2 கோடிக்கு ஓவியத்தை வாங்குமாறு காங்கிரஸ் தலைவர்களால் ராணா கபூர் மிரட்டப்பட்டுள்ளார் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
பணமோசடி வழக்கில் மார்ச் 2020-ல் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கியின் நிறுவனரும் அதன் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராணா கபூர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மூலம் ராணா கபூர், யெஸ் வங்கியின் இணை நிறுவனர், அவரது குடும்பத்தினர், திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (டி.ஹச்.எப்.எல்) விளம்பரதாரர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர் ரூ.5,050 கோடி மதிப்பிலான நிதியை மோசடி செய்ததாக அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவிடமிருந்து எம்.எப்.உசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கும்படி, அப்போதைய பெட்ரோலிய துறை மந்திரி மறைந்த முரளி தியோராவால் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறையினரிடம் ராணா கபூர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் எம்.எப் உசேன் ஓவியத்திற்கான காசோலையாக தான் செலுத்திய ரூ.2 கோடி, நியூயார்க்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டது என்றும் இந்த ஒப்பந்தத்தை முடிப்பதற்கான சம்பிரதாயங்கள் பிரியங்கா காந்தி வத்ராவின் அலுவலகத்தில் நடைபெற்றதாகவும், ஆனால், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் தான் அப்போது சந்தித்ததில்லை என்றும் ராணா கபூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராணா கபூர் 2 கோடி கொடுப்பதற்கு தயாராக இல்லாத போதும், காங்கிரஸ் தலைவர்கள் அவரை மிரட்டி பிரியங்கா காந்தி வத்ராவிடம் இருந்து ஓவியத்தை வாங்க வைத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முன்னாள் மந்திரிகளை கட்டாயப்படுத்தி சில ஓவியங்களை வாங்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Related Tags :
Next Story