வரியை உயர்த்துவது பற்றி மாநிலங்களிடம் கருத்து கேட்கவில்லை - ஜி.எஸ்.டி. கவுன்சில் மறுப்பு
143 பொருட்களின் வரியை உயர்த்துவது பற்றி மாநில அரசுகளிடம் கருத்து எதுவும் கேட்கவில்லை என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை மாற்றி அமைத்து, வருவாயை அதிகரிப்பது பற்றி பரிந்துரைக்க மாநில மந்திரிகள் அடங்கிய குழுவை ஜி.எஸ்.டி. கவுன்சில் கடந்த ஆண்டு அமைத்தது.
இதற்கிடையே, 143 பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக மாநில அரசுகளின் கருத்தை ஜி.எஸ்.டி. கவுன்சில் கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வரி உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்திதொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
143 பொருட்களின் ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தை உயர்த்துவது குறித்து மாநிலங்களிடம் ஜி.எஸ்.டி. கவுன்சில் கருத்து கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம், ஏற்கனவே நசுக்கப்பட்டுள்ள சாமானியர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினரை பெரிதும் பாதிக்கும்.
143 பொருட்களில் 92 சதவீத பொருட்கள், 28 சதவீத வரி அடுக்குக்கு உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. இதை அறிவுக்கு பொருத்தமான செயலாக நாங்கள் கருதவில்லை.
கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நிலையில், 14.5 சதவீத பணவீக்க உயர்வால் சாமானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை வஞ்சிக்கும் செயலாகவே இதை பார்க்கிறோம். மக்கள் மீது அக்கறை இல்லாத, போலித்தனமான இந்த அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அவர் கூறினார்.
ஆனால், இந்த தகவலை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் நேற்று மறுத்தன. மாநிலங்களிடம் ஜி.எஸ்.டி. கவுன்சில் கருத்து கேட்கவில்லை என்று தெரிவித்தன.
மேலும், பாதிக்கு மேற்பட்ட பொருட்களை அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரிவிகிதமான 28 சதவீதத்துக்கு உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வரிவிகிதத்தை மாற்ற ஆராய அமைக்கப்பட்ட மந்திரிகள் குழு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டன.
Related Tags :
Next Story