கோவிஷீல்டு - கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா...?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 April 2022 10:45 PM IST (Updated: 25 April 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

கோவிஷீல்டு - கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கும் தேசிய நோய் நுண்ணுயிரியல் நிறுவன விஞ்ஞானிகள் உருமாறிய ஒமைக்ரான் பிஏ-1 வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்ட ஒரு நபருக்கு மூன்று முறை மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்டு உள்ளது.
 
இந்த ஆய்வின் முடிவில் ஒமைக்ரான் பிஏ-1 வகை வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி மிக குறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது தெரிய வந்தது. அதேபோல கோவேக்சின் தடுப்பூசியும் ஒமைக்ரானுக்கு எதிராக குறைந்த பாதுகாப்பையே அளிப்பதும் தெரியவந்தது.

பூஸ்டர் ஆன்டிபாடிகளை அதிகரிக்கிறது. ஒரு பூஸ்டர் டோஸ், ஒமைக்ரானுக்கு  எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. அனைத்து பெரியவர்களுக்கும் ஒரு பூஸ்டர் தடுப்பூசி மிகச் சிறந்த கவரேஜைக் கொடுக்கும் எதிர்கால கொரோனா திரிபுகளுக்கு  எதிராகவும்  பாதுகாக்கும். எனவே, இது முன்னுரிமையின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும், அதே நேரத்தில் தடுப்பூசி போடப்படும் குழந்தை மற்றும்  மக்களுக்கு எதிர்காலத்தில் பூஸ்டர் தேவையா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

இந்த ஆய்வு முடிவுகள் குறித்து ஐ.சி.எம்.ஆர். நிபுணர்கள் கூறியதாவது:-

ஒமைக்ரான் உருமாறிய வகை வைரஸ், அதன் முள் பகுதியில் மிக அதிகமாக உருமாற்றங்களுக்கு உள்ளாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெல்டா உள்ளிட்ட மற்ற கொரோனா வகைகளால் பாதிக்கப்பட்டு மீண்ட நோயாளிகளின் உடல்களில் ஏற்பட்டு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து ஒமைக்ரான் எளிதாக தப்பித்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஆய்வுக்காக கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி 180 நாட்களை நிறைவு செய்த 24 பேரின் ரத்த மாதிரிகளும், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு அதன்பிறகு 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட 17 பேரின் ரத்த மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணை செலுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட 46 பேரின் ரத்த மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் இந்த 3 பிரிவினருக்கும் டெல்டா, பீட்டா, பி.1 வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இருப்பதும், அதேநேரத்தில் உருமாறிய ஒமைக்ரானுக்கு எதிராக நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதும் தெரியவந்தது.

கொரோனாவால் பாதிக்கப்படாத 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்தத்தில் ஒமைக்ரானுக்கு எதிராக நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் சராசரி செறிவு 0.11 என்ற அளவில் மிக குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த செறிவு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு அதன்பிறகு 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆன்டிபாடிகளின் செறிவு 11.28 என்ற அளவிலும், கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணை செலுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு ஆன்டிபாடிகளின் சராசரி செறிவு 26.25 என்ற அளவில் கூடுதலாக இருப்பதும் தெரிய வந்தது.

பிஏ-1 ஒமைக்ரான், பொதுமக்களின் உடலில் உருவாக்கி இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து எளிதில் தப்பித்து பாதிப்பை ஏற்படுத்துவது போல பிஏ-2 வகை மற்றும் தற்போதைய துணை உருமாறிய வைரஸ்களும் அந்த திறனை பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

எனவே கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திக் கொண்டவர்களில் தகுதியுள்ளவர்கள் விரைவில் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்வது மிகவும் அவசியம்.

இவ்வாறு ஐ.சி.எம்.ஆர். நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Next Story