கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்கள் ஒதுக்கீடு ரத்து: மத்திய அரசு நடவடிக்கை


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 27 April 2022 12:26 AM IST (Updated: 27 April 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு எம்.பி.யும் 10 மாணவர்களை சேர்க்கலாம் என்ற விருப்ப ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் மத்திய அரசின் 1,200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவற்றில் 14 லட்சத்து 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

அப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பல்வேறு ஒதுக்கீடுகளில், எம்.பி.க்களுக்கான விருப்ப ஒதுக்கீடும் அடங்கும்.

நாடாளுமன்ற மக்களவையில் 543 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 245 எம்.பி.க்கள் என மொத்தம் 788 எம்.பி.க்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10 மாணவர்களை சேர்க்க சிபாரிசு செய்யலாம். இதன்மூலம் ஆண்டுக்கு 7 ஆயிரத்து 880 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

அடுத்த 2022-2023 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இந்த எம்.பி. விருப்ப ஒதுக்கீடு உள்பட அனைத்து விருப்ப ஒதுக்கீடுகளையும் நிறுத்திவைக்க கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கே.வி.எஸ்.) சில வாரங்களுக்கு முன்பு முடிவு செய்தது. 

இந்தநிலையில், எம்.பி.க்கள் ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கே.வி.எஸ். வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எம்.பி.க்கள் ஒதுக்கீடு ரத்து மட்டுமின்றி, மத்திய கல்வி அமைச்சக ஊழியர்களின் 100 குழந்தைகள், எம்.பி.க்கள், ஓய்வுபெற்ற கேந்திரிய வித்யாலயா ஊழியர்கள் ஆகியோரின் குழந்தைகள் மற்றும் பேரப்பிள்ளைகள், பள்ளி நிர்வாக குழு தலைவரின் விருப்ப ஒதுக்கீடு ஆகிய ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே சமயத்தில், பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா, அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா, ஷவுர்யா சக்ரா, தேசிய வீரதீர விருது ஆகியவற்றை பெற்றவர்களின் குழந்தைகள், ‘ரா’ ஊழியர்களின் 15 குழந்தைகள், நுண்கலையில் சிறப்பு திறன்வாய்ந்த குழந்தைகள் ஆகியோருக்கான ஒதுக்கீடு தொடரும்.

மேலும், கொரோனாவால் அனாதை ஆன குழந்தைகளை ‘பி.எம்.கேர்ஸ்’ திட்டத்தின்கீழ் சேர்த்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாவட்ட கலெக்டரின் பரிந்துரைப்படி, ஒரு பள்ளிக்கு அதிகபட்சம் 10 குழந்தைகள் என்ற அடிப்படையில் அவர்கள் சேர்க்கப்படுவார்கள். பணியின் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களின் குழந்தைகளுக்கு மொத்தம் 60 இடங்கள் ஒதுக்கப்படும். அவர்கள் வெளிநாட்டில் படித்த பள்ளியில் மாற்று சான்றிதழ் வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டு ஒன்றுக்கு ஒரு பள்ளியில் 5 குழந்தைகளுக்கு மிகாமல் சேர்க்கப்படுவர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story