ஒமைக்ரானில் இருந்து 4-வது அலை வராது..!! - நிபுணர் கருத்து


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 28 April 2022 2:52 AM IST (Updated: 28 April 2022 2:52 AM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரானில் இருந்து 4-வது அலை வராது என்று தொற்று நோய் நிபுணர் கூறி உள்ளார்.

ஜலந்தர், 

நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தேசிய தொற்று நோய் திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு அதிரடியாக 90 சதவீதம் அதிகரித்தது. 2 வாரங்களாக தினமும் பாதிப்பு கூடுகிறது. இது 4-வது அலை பற்றிய கவலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெருந்தொற்று நோயானது, வெறும் உயிரியல் மருத்துவ ரீதியிலானது அல்ல; அது பொருளாதாரம், அரசியல் சார்ந்ததும் கூட.

டெல்டாவுடன் ஒப்பிடுகையில், புதிய அலையை நாடு காண்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால், தொற்றை ஏற்படுத்துகிற வைரஸ்கள், ஒமைக்ரானில் இருந்து மாறுபட்டவை. ஒமைக்ரான் வைரசை காட்டிலும் பிஏ.2 வைரஸ், 2 முதல் 20 சதவீதம் வரையில் அதிக தொற்றை ஏற்படுத்தும்.

ஒமைக்ரானில் இருந்து 4-வது அலை வராது. அது அதிகரிக்கும் மாற்றத்துக்கு உட்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளன. இதனால்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு பெரிய அலையும், ஒரு உரு மாறிய வைரசுடன் தொடர்புடையது. ஆல்பா, டெல்டா வைரஸ்களை விட ஒமைக்ரான் அதிகமாக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி மற்றும் தொற்றின் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தி வந்துள்ளது. அவர்களுக்கு இணைநோய் இல்லாதபோது, தொற்று பாதித்தாலும் சாதாரண காய்ச்சலை போன்ற அறிகுறிகள்தான் இருக்கும்.

சுகாதார நெருக்கடிகளை தடுப்பதற்கு, இந்தியா தொற்று நோயின் சில அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும். மக்களிடையே ஏற்கனவே நோய் எதிர்ப்புச்சக்தி உள்ளது. இருந்தாலும், வழக்குகளில் அசாதாரண உயர்வு ஏற்படுவதை கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Next Story