நிற்காத லாரி முன்பு தொற்றிச்சென்ற சுங்கச்சாவடி அலுவலர்: சினிமா சாகசம் போல நிகழ்ந்த சம்பவம்


நிற்காத லாரி முன்பு தொற்றிச்சென்ற சுங்கச்சாவடி அலுவலர்: சினிமா சாகசம் போல நிகழ்ந்த சம்பவம்
x
தினத்தந்தி 28 April 2022 3:32 AM IST (Updated: 28 April 2022 3:32 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் சினிமா சாகசம் போல நிற்காத லாரி முன்பு தொற்றிச்சென்ற சுங்கச்சாவடி அலுவலரால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்னூல், 

நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தின் முன்பு கதாநாயகன் தொற்றியபடி சண்டையிடும் சாகசமெல்லாம் சினிமாவில்தான் இடம்பெறும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. 

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே தேசிய நெடுஞ்சாலை 5-ல் உள்ள சுங்கச்சாவடிக்கு உருளைக்கிழங்கு ஏற்றிய ஒரு லாரி வந்தது. அந்த லாரி டிரைவர் ‘பாஸ்ட்டேக்’ மூலம் கட்டணம் செலுத்த இயலவில்லை. அதைத் தொடர்ந்து அபராதமாக ஒரு தொகை செலுத்துமாறு லாரி டிரைவரிடம் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கேட்டிருக்கிறார். அதில் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து அங்கிருந்து லாரியை ஓட்டிச்செல்ல டிரைவர் முயன்றிருக்கிறார். அதைத் தடுக்கும் விதமாக சுங்கச்சாவடி மேற்பார்வையாளர் லாரியின் குறுக்கே வந்திருக்கிறார்.

ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் மோதுவது போல வரவே, திகைத்துப்போன மேற்பார்வையாளர் லாரியின் முன்புற பம்பரில் ஏறி தொற்றிக்கொண்டிருக்கிறார். அதன்பிறகும் லாரியை டிரைவர் நிறுத்தவில்லை. 

இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை துரத்தினர். நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ. துரத்தலுக்கு பின் ஒருவழியாய் லாரியை மடக்கினர். அதுவரை உயிரை கையில் பிடித்தபடி லாரி முன்புற கம்பியை கெட்டியாய் பற்றிக்கொண்டிருந்த மேற்பார்வையாளர் நிம்மதி பெருமூச்சுவிட்டார். அதிரடி லாரி டிரைவர் தற்போது நிதானமாக கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

Next Story