பருவகால மாற்ற தீர்வு; பெரும்பங்கு வகிக்க இந்தியா விருப்பம்: மத்திய அரசு


பருவகால மாற்ற தீர்வு; பெரும்பங்கு வகிக்க இந்தியா விருப்பம்:  மத்திய அரசு
x
தினத்தந்தி 28 April 2022 8:53 AM IST (Updated: 28 April 2022 8:53 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா பருவகால மாற்றத்தின் ஒரு பகுதி இல்லையென்றாலும் அதற்கான தீர்வு காண்பதில் பெரும்பங்கு வகிக்க விரும்புகிறது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.




புதுடெல்லி,


உலகில் மனிதர்களின் செயல்பாடுகளால் கார்பன்-டை-ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து உள்ளது.  இதனால், பூமியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.  இதனை தொடர்ந்து வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள், பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட ஆபத்து தரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பது, பனிப்பாறைகள் உருகுவது போன்றவற்றால் ஏற்பட கூடிய பருவகால மாற்றம் பேரழிவுகளை ஏற்படுத்துகிறது என விஞ்ஞானிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.  ஆனால், அதனை மனித சமூகம் கண்டும் காணாமல் போய் கொண்டிருக்கிறது.

இந்த பருவகால மாற்றங்களால் உலக அளவில் உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்வியல் முறையில் பெரும் பாதிப்புகளும், அழிவுகளும் ஏற்பட்டு விடும்.

வருங்காலத்தில் மிக அபாய அளவை எட்டும் வகையில் வெப்பநிலை உயர்வை தவிர்க்க சாத்தியமிக்க என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி கடந்த 2018ம் ஆண்டில் ஐ.நா. பருவநிலை மாற்ற அறிவியல் குழு பட்டியலிட்டது.

அதில், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் விவசாயம் மூலம் வெளியாகும் பூமியை வெப்பமாக்கும் வாயுக்களை 2030ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வரக்கூடிய தசாப்தங்களில் பத்து லட்சம் விலங்கு, பூச்சி மற்றும் தாவர இனங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளன என்று அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

நகரங்களின் வளர்ச்சி, விவசாயத்துக்காக வனங்கள் அழிப்பு, உணவுக்காக மீன் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் முக்கால் பகுதி நிலம் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு கடல் வளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த சூழலில், ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று, வரும் ஆண்டுகளில் பூமியானது முன்பிருந்த நிலையை விட மிக அதிக பேரழிவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாய நிலையில் உள்ளது என சுட்டி காட்டி உள்ளது.

அந்த அறிக்கையில், தற்போது காணப்படும் பருவகால மாற்றங்கள் கவனிக்கப்படாமல் போனால், வருகிற 2030ம் ஆண்டுக்குள் ஒவ்வோர் ஆண்டும் 560 என்ற அளவில் உலக நாடுகள் பேரழிவுகளை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.  இது நாள் ஒன்றுக்கு 1.5 பேரழிவுகள் என்ற விகிதத்தில் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பாரிஸ் பருவகால மாநாடு புவி வெப்பமடைதலை சராசரியாக 2 டிகிரி செல்ஷியசுக்கு கீழாக வைத்திருக்கும் நோக்கம் கொண்டுள்ளது.  இதனை 2015ம் ஆண்டில் 195 நாடுகள் இணைந்து ஏற்படுத்தின. இதற்கு முன்னதான கியோட்டோ உடன்பாட்டை இது மாற்றியமைத்தது. கடைசியாக 2016ம் ஆண்டில் இது உலகளவில் ஏற்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது என அப்போது அதிபராக இருந்த டிரம்ப் அறிவித்து விட்டார்.  எனினும், அனைத்து நாடுகளும் பாரிஸ் ஒப்பந்தத்தின் மீது உறுதியாக இருக்கின்றன.

இந்த சூழலில், புதுடெல்லியில் தனியார் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி புபேந்தர் யாதவ் பேசும்போது, பருவகால மாற்ற பிரச்சனையின் ஒரு பகுதியாக இந்தியா இல்லை.  ஆனால், அதற்கான தீர்வு காண்பதில் ஒரு பெரிய பங்கு வகிக்க நாங்கள் விரும்புகிறோம்.  பங்கு வகிப்போம்.  வளர்ந்து வரும் நாடுகளின் குரலாக இந்தியா உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த பருவகால மாற்றம் பற்றி தொடர்ந்து அவர் பேசும்போது, தொழில்நுட்ப பரிமாற்றம் அவசியம்.  ஆனால், அதுவும் நடைபெறவில்லை.  பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஜி20 நாடுகளில், தேசிய அளவிலான தீர்மானத்திற்கான பங்கை நிறைவேற்றிய சில நாடுகளில் இந்தியாவும் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

சர்வதேச பருவகால இலக்குகளை அடைவதற்கு உதவிடும் வகையில், சி.டி.ஆர்.ஐ. (பேரிடரை தாங்க கூடியஉள்கட்டமைப்புக்கான கூட்டணி), ஐ.எஸ்.ஏ. (சர்வதேச சோலார் கூட்டணி) மற்றும் ஓ.எஸ்.ஓ.டபிள்யூ.ஓ.ஜி. (ஒரே சூரியன் ஒரே உலகம் ஒரே மின் வினியோக அமைப்பு) போன்ற திட்டங்களை தொடங்கி நடத்தி வருவதற்கான அடையாளமே, அதில் இந்தியா உறுதியான முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது என்று தெரிய வருவதுடன் பருவகால மாற்றத்திற்கான தலைவராகவும் மாறி வருகிறோம்.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு பருவகால விசயங்களுக்கான நிதி என்பது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது.  ஆனால், இந்தியாவின் பருவகால திட்டம், நாட்டின் வளர்ச்சி சார்ந்த அடிப்படையிலானது.  இதனை சரிசெய்து கொள்வதற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பணம் தேவை.

இதுபற்றி கோபன்கேஹன் மாநாட்டின்போது, வளர்ந்து வரும் நாடுகளுக்கு 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கப்படும் என வளர்ச்சி அடைந்த நாடுகள் உறுதி வழங்கின.  ஆனால் அவர்களுடைய சொந்த உறுதிமொழியை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பருவகால நிதிஒதுக்கீடு பற்றி தெளிவாக வரையறை செய்வதற்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒப்புதல் அளித்தன.  அதற்கான நிதியை வழங்குவதற்கான தேவையின் அங்கீகாரம் அதிகரித்து உள்ளது என்றும் அவை தெரிவித்தன என்று அவர் கூறியுள்ளார்.


Next Story