பெட்ரோல் விலை குறைய... எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய மந்திரி யோசனை


பெட்ரோல் விலை குறைய... எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய மந்திரி யோசனை
x
தினத்தந்தி 28 April 2022 10:24 AM IST (Updated: 28 April 2022 10:24 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எரிபொருளுக்கான வரியை குறைத்தால் பெட்ரோல் விலை குறையும் என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் கூறியுள்ளார்.


புதுடெல்லி,


நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலையேற்றம் மக்களால் தாங்கமுடியாத அளவுக்கு உள்ளது.  உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டுள்ள போரால் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து உள்ளது, எரிபொருள் விலை உயர்வுக்கான காரணங்களில் ஒன்று என ஒருபுறம் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்-மந்திரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறும்போது, எரிபொருள் மீதான வரியை 2021 நவம்பர் மாதமே மத்திய அரசு குறைத்து விட்டது.  பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்க வேண்டும்.  வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்.

தமிழகம் உட்பட சில மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை.  மத்திய அரசுக்கு செவி கொடுக்காத மாநில மக்கள் தொடர்ந்து சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மராட்டியம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், தமிழகம், கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் சில காரணங்களால் அதனை கேட்கவில்லை.  மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாநிலங்கள் பெட்ரோல் - டீசல் விலை மற்றும் வாட் வரியை குறைக்க வேண்டும்.

வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும்.  பொருளாதார முடிவுகளில் மத்திய, மாநில அரசுகள் இடையேயான ஒத்துழைப்பு மிக அவசியம் என்று கூறினார்.

இந்த நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கடந்த 2018ம் ஆண்டில் இருந்து இதுவரை எரிபொருள் வரியாக மராட்டிய அரசு ரூ.79 ஆயிரத்து 412 கோடி ஈட்டியுள்ளது.  நடப்பு ஆண்டில் இந்த வசூல் ரூ.33 ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மொத்தம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 757 கோடி அந்த அரசுக்கு கிடைக்கும்.  ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் வாட் வரியை குறைத்து, மராட்டிய அரசு மக்களுக்கு நிவாரணம் அளிக்க ஏன் முன்வரவில்லை? என்று பூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள், இறக்குமதி மதுபானத்திற்கான வரியை குறைப்பதற்கு பதிலாக எரிபொருளுக்கான வரியை குறைத்தால் பெட்ரோல் விலை வெகுவாக குறையும் என அவர் கூறியுள்ளார்.

மராட்டிய அரசு பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.32.15 வரி விதிக்கிறது.  காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.29.10 வரி விதிக்கப்படுகிறது.

ஆனால், பா.ஜ.க. ஆளக்கூடிய மாநிலங்களான உத்தரகாண்டில் ரூ.14.15 மற்றும் உத்தர பிரதேசத்தில் ரூ.16.50 மட்டுமே வரியாக விதிக்கப்படுகிறது என்றும் ஹர்தீப் சிங் கூறியுள்ளார்.


Next Story