ராணுவ தலைமை தளபதி தேசிய போர் நினைவு சின்னத்தில் மரியாதை


ராணுவ தலைமை தளபதி தேசிய போர் நினைவு சின்னத்தில் மரியாதை
x
தினத்தந்தி 30 April 2022 11:46 AM IST (Updated: 30 April 2022 11:46 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ தலைமை தளபதி ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை இன்று வழங்கப்பட்டது.





புதுடெல்லி,



இந்திய ராணுவ தலைமை தளபதியாக எம். முகுந்த் நரவானே பதவி வகித்து வருகிறார்.  அவரது பதவி காலம் இன்றுடன் முடிவடைய உள்ளது.  கடந்த 40 ஆண்டுகள் மற்றும் 28 மாதங்களாக இந்திய ராணுவத்தில் அவர் பணியாற்றி உள்ளார்.

நாட்டின் 27வது ராணுவ தலைமை தளபதியான முகுந்த் நரவானே தனது ஓய்வை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்திற்கு இன்று நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவர் பதவியேற்ற குறுகிய காலத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்தது.

இதனை தொடர்ந்து, சீன படைகள் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் குவிக்கப்பட்டன.  இந்தியாவும் பதிலடியாக படைகளை குவித்தது.  இதன்பின் படைகள் வாபஸ் பெறப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தது.  அதில் முன்னேற்றம் ஏற்பட்டு படைகளின் ஒரு பகுதி வாபஸ் பெறப்பட்டது.  இதேபோன்று, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் நிலைநிறுத்த வலியுறுத்தியது ஆகியவை அவரது பதவி காலத்தில் நடந்தன.

ராணுவ தலைமை தளபதி இன்றுடன் ஓய்வு பெறும் சூழலில் அவருக்கு டெல்லி தெற்கு பிளாக் பகுதியில் ராணுவ அணிவகுப்பு மரியாதை இன்று வழங்கப்பட்டது.  அதனை அவர் ஏற்று கொண்டார்.

டெல்லியில் இருந்து நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு கடந்த டிசம்பர் 8ந்தேதி காலை முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.

நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி என்ற பெருமையை பெற்ற பிபின் ராவத் மறைவால் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக, ஓய்வு பெறும் ராணுவ தளபதி நரவானே நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


Next Story