கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதீத வெப்பமான ஏப்ரல் மாதம் இது! வானிலை ஆய்வு மையம் தகவல்
மே மாதத்தில் நாட்டில் சராசரி மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும்.
புதுடெல்லி,
நாட்டின் வடமேற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்ப அலைகள் நிலவி வருகின்றன.
தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது:-
இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. வடமேற்கு இந்தியாவின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 35.9 டிகிரி செல்சியஸ் ஆகவும் மற்றும் மத்திய இந்தியாவின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 37.78 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அடைந்தது.
நாட்டின் வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளான குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், மே மாதத்திலும் வழக்கமான வெப்பநிலையை விட அதிகமாகவே இருக்கும்.தென் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதத்தில் இரவுப்பொழுது வெப்பமாகவே இருக்கும்.
ஏப்ரல் மாதத்தில் இந்தியா முழுவதும் காணப்பட்ட சராசரி வெப்பநிலை 35.05 டிகிரி ஆகும். கடந்த 122 ஆண்டுகளில் பதிவான நான்காவது அதிகபட்ச சராசரி வெப்பநிலை இதுவாகும்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் "வானிலையில் ஏற்பட்ட தொடர்ச்சியான குறைந்த மழைப்பொழிவு செயல்பாட்டின்" காரணமாக அதிக வெப்பநிலை இருந்தது.
மழைப்பொலிவு:
மே மாதத்தில் நாட்டில் சராசரி மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும்.
வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், தென் தீபகற்ப இந்தியாவின் தீவிர தென்கிழக்கு பகுதிகளில், மே மாதத்தில் இயல்பை விட குறைவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதத்தில், வடமேற்கு இந்தியாவில் சுமார் 89 சதவீத மழைப்பொழிவில் பற்றாக்குறை பதிவாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சுமார் 83 சதவீத மழைப்பொழிவில் பற்றாக்குறை பதிவாகியுள்ளது.
மேற்கத்திய பகுதிகளிலிருந்து ஏற்பட்ட வானிலை மழை சலனம் மற்றும் இடையூறுகள், வட இந்தியாவில் ஆறு முறை ஏற்பட்டன. ஆனால் அவை பெரும்பாலும் பலவீனமானவை மற்றும் இமயமலையின் உயரமான பகுதிகள நோக்கி நகர்ந்தன.
கடைசியாக மேற்கத்திய பகுதிகளிலிருந்து ஏற்பட்ட மூன்று சலனங்கள், ஏப்ரல் மாதத்தில் ராஜஸ்தானில் புழுதிப் புயலையும், டெல்லியின் சில பகுதிகளில் பலத்த காற்றையும் ஏற்படுத்தின.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story