முறைகேட்டில் ஈடுபட்ட பா.ஜனதாவினரை பாதுகாக்கவே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ரத்து- டி.கே.சிவக்குமார்
முறைகேட்டில் ஈடுபட்ட பா.ஜனதாவினரை பாதுகாக்கவே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை அரசு ரத்து செய்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
டி.கே.சிவக்குமாருடன் சந்திப்பு
பெங்களூரு சதாசிவநகரில் உள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் நேற்று காலையில் அவரை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை ரத்து செய்து இருப்பதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க போவதாகவும், அதற்கு ஆதரவு வழங்கும்படியும் டி.கே.சிவக்குமாரிடம் கேட்டுக் கொண்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி இருக்கும் என்று டி.கே.சிவக்குமார் உறுதி அளித்தார். பின்னர் டி.கே.சிவக்குமாா் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அரசின் முடிவு தவறு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட பா.ஜனதா கட்சியை சேர்ந்த திவ்யா காகரகியை 20 நாட்களுக்கு பின்பு போலீசார் கைது செய்திருப்பது பாராட்டத்தக்கது. சப்-இன்ஸ்பெக்டர் தோ்வு முறைகேடு தொடா்பாக இன்னும் விசாரணை முடியவில்லை. விசாரணை நடந்து வரும் போதே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்தப்படும் என்று மந்திரி அரகஞானேந்திரா தெரிவித்துள்ளார். அரசின் முடிவு தவறானதாகும்.
முதலில் இந்த தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என்று அரக ஞானேந்திரா கூறினார். பின்னர் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக நடந்த தேர்வை ரத்து செய்திருப்பதாக மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவினரை பாதுகாக்க...
போலீஸ் மந்திரியாக இருக்கும் அரக ஞானேந்திராவுடன், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கு உத்தரவிட்டு இருப்பது சரியல்ல. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்பித்து விட்டதாகவும், நேர்மையான முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டின் பின்னணியில் ஏராளமான பா.ஜனதாவினருக்கும் தொடர்பு உள்ளது. அதனால் பா.ஜனதாவினரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அவசரம், அவசரமாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திவ்யா காகரகியை கைது செய்யவும் 20 நாட்கள் ஆகி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story