மத்தியபிரதேசத்தில் கற்பழிப்பு முயற்சியில் ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளம்பெண்


மத்தியபிரதேசத்தில் கற்பழிப்பு முயற்சியில் ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளம்பெண்
x
தினத்தந்தி 1 May 2022 2:57 AM IST (Updated: 1 May 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

மத்தியபிரதேசத்தில் கற்பழிப்பு முயற்சியில் ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளம்பெண் படுகாயமடைந்தார். அவரை கற்பழிக்க முயன்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

போபால், 

கோவிலுக்குச் சென்ற இளம்பெண்

உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஒரு 24 வயது இளம்பெண். இவர், மத்தியபிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாகேஸ்வர் தாம் கோவிலுக்கு கடந்த 9 மாதங்களாக சென்றுவந்தார். அந்த நேர்த்திக்கடனின் நிறைவாக கடந்த வாரமும் இக்கோவிலுக்குச் சென்றார்.

கோவிலில் வழிபட்டபின் அந்தப் பெண் புதன்கிழமை இரவு, மத்தியபிரதேச மாநிலம் கஜுரகோவிலில் இருந்து உத்தரபிரதேசத்தின் மகோபாவுக்குச் செல்லும் பயணிகள் ரெயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.

கற்பழிக்க முயற்சி

இடையில் பெட்டியில் தொற்றிக்கொண்ட ஒரு 30 வயது நபர், அந்த பொதுப்பெட்டியில் வேறு பயணிகள் யாரும் இல்லாத துணிச்சலில் இளம்பெண்ணை நெருங்கி ஆபாசமாக பேசினார். பின்னர் அவரிடம் அத்துமீறவும் முயன்றார்.விலகி ஓடிய அந்தப் பெண்ணை துரத்தித் துரத்தி கற்பழிக்க முயற்சித்தார். அவர் அடுத்த பெட்டிக்குள் ஓடியபோதும் அங்கும் பயணிகள் யாரும் இல்லை.

அந்த ஆசாமியின் பிடியில் சிக்கிப் போராடிய அப்பெண், அவரின் கையைக் கடித்தார்.அதில் ரத்தக் காயம் அடைந்த அந்நபர், ஆத்திரத்தின் உச்சியில் இளம்பெண்ணின் வயிற்றிலும், முகத்திலும் சரமாரியாக தாக்கினார்.

ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டார்

பின்னர் அந்தப் பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட முயன்றார். பெட்டியின் கதவு கைப்பிடியை பற்றித் தொங்கியபடி அப்பெண் உயிருக்குப் போராடினார்.

அப்போது அவரின் கை மீது அந்த ஆசாமி திரும்பத் திரும்ப உதைத்ததால், கை நழுவி ராஜ்நகர் என்ற இடத்தில் வெளியே விழுந்தார்.

அதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை ரெயில்வே ஊழியர்கள் சிலர் பார்த்து, ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ரெயில்வே போலீசார் விசாரணை

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த ரெயில்வே போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு வினாயக் வர்மா தெரிவித்தார்.


Next Story