உ.பி.யில் படுதோல்வியை சந்தித்த காங்கிரசை மீட்டெடுக்க 3 முக்கிய யோசனைகளை முன்வைத்த பிரியங்கா காந்தி!


உ.பி.யில் படுதோல்வியை சந்தித்த காங்கிரசை மீட்டெடுக்க 3 முக்கிய யோசனைகளை முன்வைத்த பிரியங்கா காந்தி!
x
தினத்தந்தி 1 May 2022 7:35 PM IST (Updated: 1 May 2022 7:35 PM IST)
t-max-icont-min-icon

மூன்று முடிவுகளில், கட்சி மேலிடம் எந்த விருப்பத்திற்கு செல்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

லக்னோ,

காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு நாடெங்கும் உள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை காணாத படுதோல்வியை சந்தித்தது. 

அக்கட்சியின் வேட்பாளர்கள் 399 இடங்களில் டெபாசிட் இழந்தனர். 2022ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு, உ.பி. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அஜய் குமார் லல்லு, கட்சியின் மோசமான செயல்திறனைக் காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதனையடுத்து, உ.பி யில் காங்கிரசை மீட்டெடுக்க 3 யோசனைகளை அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி முன்வைத்துள்ளார். 

பிரியங்கா காந்தி எடுத்துள்ள இந்த முடிவுகள் குறித்து உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுடன் விவாதித்தார். அதன்மை தொடர்ந்து, கட்சி தலைவர் சோனியா காந்தியின் பார்வைக்கு மூன்று பரிந்துரைகளையும் அனுப்பியுள்ளார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சிக்கான மூன்று முடிவுகளை அவர் முன்மொழிந்துள்ளார். முதல் முடிவாக, இதுவரை நடைமுறையில் இருந்து வரும் சில மூத்த தலைவர்களின் தலைமையில் காங்கிரஸ் கமிட்டியை மீண்டும் அமைப்பது.

புதிதாக நியமிக்கப்படும் மாநிலத் தலைவர் தலைமையில், நான்கு-ஐந்து பணித் தலைவர்களை நியமிப்பது இரண்டாவது முடிவாகும். மாநிலத் தலைவர், கட்சி அமைப்பை அடிமட்டத்தில் இருந்து மீட்டெடுக்கக் கூடிய ஒருவராக இருப்பார்.

மூன்றாவதாக, மாநிலத்தை 4 மண்டலங்களாக பிரித்து, மேற்கு உ.பி., கிழக்கு உ.பி., அவத் மற்றும் புந்தேல்கண்ட் என நான்கு முக்கிய சுயேச்சை மண்டலங்களாகப் பிரித்து, நான்கு மண்டலங்களுக்கும் சுயேச்சைக் குழுக்களை அமைப்பது.

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன், மூன்று முடிவுகளில், கட்சி மேலிடம் எந்த விருப்பத்திற்கு செல்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், வரும் மாதத்தில் ஒரு முடிவு எட்டப்படும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். 

இன்னும் புதிய தலைவர் நியமிக்கப்படாததால், தற்போது உ.பி யில் கட்சியின் அன்றாடப் பணிகளை, மூத்த பொதுச் செயலாளர் தினேஷ் சிங் கவனித்து வருகிறார்.

Next Story