ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தின் ஜி.எஸ்.டி. வசூல் 9 ஆயிரம் கோடி ரூபாய் - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் ஜி.எஸ்.டி. வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளதாகவும், மார்ச் மாதத்தைக் காட்டிலும் ஏப்ரல் மாத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத்தில் வசூலான ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி ரூபாயில் மத்திய ஜி.எஸ்.டி. 33 ஆயிரத்து 159 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டி. 41 ஆயிரத்து 793 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. 81 ஆயிரத்து 939 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. தொகையில் இருந்து மத்திய ஜி.எஸ்.டி.க்கு 33 ஆயிரத்து 423 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டி.க்கு 26 ஆயிரத்து 962 கோடி ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு கிடைத்த மொத்த வருவாய் முறையே 66 ஆயிரத்து 582 கோடி ரூபாய் மற்றும் 68 ஆயிரத்து 755 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் ஜி.எஸ்.டி. வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ஏப்ரல் மாதத்தில் தான் ஜி.எஸ்.டி. வசூல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவை தாண்டி உள்ளதாகவும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதத்தில் 9 ஆயிரத்து 724 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story