பெங்களூருவில், தலை தூக்கும் தண்ணீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் கடும் அவதி


பெங்களூருவில், தலை தூக்கும் தண்ணீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 2 May 2022 9:27 AM IST (Updated: 2 May 2022 9:27 AM IST)
t-max-icont-min-icon

ஆயிரம் ஏரிகளின் நகரம் என்றழைக்கப்பட்ட பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு தலை தூக்கி வருகிறது.

பெங்களூரு,

புவி வெப்பமயமாதல் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் குளங்கள் மற்றும் ஏரிகளை பலர் அழித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பெங்களூரு உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் தண்ணீருக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது.

பெங்களூருவிற்கு பூங்கா நகரம், சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற பெயர்களுடன் ஆயிரம் ஏரிகளின் நகரம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. ஆனால் தற்போது பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. கோடைக்காலம் வந்தால் தண்ணீருக்காக மக்கள் அலைந்து திரியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கோடை காலத்தில் பெங்களுரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வரண்டு விடுகின்றன.

பெங்களூருவில் மக்கள் தொகை 1.30 கோடியாக உள்ளது. அடுத்த 8 ஆண்டுகளில் (2030-க்குள்) மக்கள் தொகை 2 கோடியாக அதிகரிக்கும் என புள்ளிவிவரம் சொல்கிறது. அப்போது நாள் ஒன்றுக்கு 2,000 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை எழும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெங்களூரு மாநகராட்சி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் தென்பகுதி மாவட்டங்களுக்கான தண்ணீர் தேவையை காவிரி ஆறு பூர்த்தி செய்து வருகிறது. அதாவது காவிரி ஆற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,450 மில்லியன் லிட்டர் நீர் பெங்களூரு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் அதிகரித்து வரும் மக்கள் தொகை, கோடை வெயில் போன்றவற்றால் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எத்தினஒலே மற்றும் திப்பகொண்டனஹள்ளி நீர்தேக்க திட்டப்பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.

காவிரி 5-வது நிலை குடிதண்ணீர் திட்டப்பணிகள் இறுதி வடிவத்தை பெற்று வருகிறது. அந்த திட்டம் மூலம் 10 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீர் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

பெங்களூருவில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. முக்கியமாக டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, பனசவாடி, டேனரி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

பெங்களூரு மாநகராட்சி நகரின் பல்வேறு பகுதிகளில் 905 குடிநீர் சுத்திரிகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளது. இதற்காக மாநகராட்சி ரூ.123 கோடி செலவிட்டது குறிப்பிடத்தக்கது. குடிநீர் தட்டுப்பாடு குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. மாநகராட்சி சார்பில் நகரில் பல்வேறு பகுதிகளுக்கு 65 டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கே.ஆர்.புரம், மாரத்தஹள்ளி, பசவனபுரா, ஒயிட்பீல்டு, சர்ஜாபுரா, பெல்லந்தூர், பொம்மனஹள்ளி, தலகட்டபுரா, கெங்கேரி, எலகங்கா, பீனியா, மாகடி போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் அன்றாட குடிநீர் தேவைக்கு தனியார் டேங்கர்களை நாடுகின்றனர்.

இந்த தட்டுப்பாட்டை தனியார் டேங்கர் லாரிகள் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். தண்ணீர் விற்பனை செய்யும் பணியில் 3,000 முதல் 4,000 டேங்கர்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதில் 200 டேங்கர்கள் மட்டுமே மாநகராட்சி அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. மற்ற டேங்கர்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன.

பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்த்து தங்கு தடையின்றி குடிநீர் வழங்க பெங்களூரு மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story