ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு: மாவட்டம் முழுவதும் ஷவர்மா கடைகள் மூடல்


ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு: மாவட்டம் முழுவதும் ஷவர்மா கடைகள் மூடல்
x
தினத்தந்தி 2 May 2022 1:19 PM GMT (Updated: 2 May 2022 1:19 PM GMT)

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி தேவானந்தா. 16 வயதான தேவானந்தா கரிவெள்ளூர் பகுதியிலுள்ள உயர் நிலை பள்ளியில் பயின்று வந்தார்.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை தனது பள்ளி நண்பர்களான சக மாணவ/மாணவிகளுடன் பள்ளிக்கூடம் அருகே அமைந்திருந்த ஐடியல் என்ற குளிர்பான கடையில் தேவானந்தா ஷவர்மா சாப்பிட்டுள்ளார்.

ஆனால், ஷவர்மா சாப்பிட்ட மாணவி தேவானந்தாவுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை போன்று அந்த கடையில் ஷவர்மா சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கசரக்கோடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவி தேவானந்தா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெட்டுப்போன ஷவர்மாவை வாடிக்கையாளர்களுக்கு குளிர்பான கடை வழங்கியுள்ளது. அதை சாப்பிட்ட பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாணவி தேவாந்தா உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடையின் உரிமையாளர் முகமது தற்போது மத்திய கிழக்கு நாட்டில் உள்ளார். இந்த விவகாரத்தை தொடர்ந்து முகமதுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதேபோல், ஷவர்மாவை தயாரித்த நேபாளத்தை சேர்ந்த நந்தேஷ் ராய் மற்றும் கடையை நிர்வகித்து வந்த அனாஸ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி தேவானந்தா உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உணவுக்கடைகள், குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதேவேளை, கசரக்கோடு மாவட்டம் முழுவதிலும் உள்ள ஷவர்மா கடைகளை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story