முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட மொத்த மந்திரி சபையும் மாற்றமா? - கர்நாடக அரசியலில் பரபரப்பு
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட கர்நாடக மந்திரிசபை மாற்றப்படும் என்று தகவல் வெளியாகி வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளின் நிறைவு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பதக்கங்கள் வழங்கி பேசுகிறார்.
அதனை தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அவர் ஒப்புதல் வழங்குவாரா? என்று தெரியவில்லை. பசவ ஜெயந்தியை முன்னிட்டு பசவண்ணரின் சிலைக்கு அமித்ஷா மாியாதை செலுத்துகிறார்.
அவர் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். கர்நாடகத்தில் அந்த சமூகம் தான் ஆதிக்க சமூகமாக திகழ்கிறது. அது பா.ஜனதாவின் வாக்கு வங்கியாகவும் கருதப்படுகிறது. அதன் பிறகு பல்லாரிக்கு செல்லும் அமித்ஷா அங்கு நிருபதுங்கா பல்கலைக்கழகம், தடய அறிவியல் ஆய்வு கூடம் போன்றவற்றை தொடங்கி வைக்கிறார். முன்னதாக பெங்களூருவில் நாட்கிரிட் என்ற நிறுவனத்தையும் தொடங்கி வைக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மந்திரிசபையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம் கட்சி பலம் பெறும் என்று கூறினார்.
அவரது இந்த பேச்சு கர்நாடக பா.ஜனதாவில் புயலை கிளப்பியுள்ளது. அதாவது குஜராத்தை போல் முதல்-மந்திரி உள்பட ஒட்டுமொத்த மந்திரிசபையையும் மாற்றிவிட்டு புதிய மந்திரிசபை அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) மே மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜனதா அரசு மீது ஊழல் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
40 சதவீத கமிஷன் புகார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு, மத பிரச்சினைகள் என்று கர்நாடகத்தில் நிலைமை பரபரப்பாகவே காணப்படுகிறது. இவை பா.ஜனதாவின் நற்பெயருக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அக்கட்சி தலைவர்கள் சிலர் கருதுகிறார்கள்.அதனால் ஒட்டுமொத்த மந்திரிசபையும் மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சிவமொக்காவில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (நேற்று) கர்நாடகம் வருகிறார். அவரை சந்தித்து பேச இருக்கிறேன். கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. அதனால் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் கர்நாடகத்திற்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறார். அதனால் அவரை கட்சி மேலிடம் மாற்ற வாய்ப்பு இல்லை’’ என்றார்.
மந்திரிசபையில் தற்போது 5 இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ரேணுகாச்சார்யா உள்பட சில மூத்த எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அமித்ஷா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் பெங்களூரு வந்து சென்றார். அப்போது சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெற வியூகம் வகுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அமித்ஷாவின் கர்நாடக வருகை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story