ஜோத்பூரில் ரமலான் கொண்டாட்டம்: இரு பிரிவினரிடையே கடும் மோதல்..!! - இணைய சேவைகள் நிறுத்தம்
ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஜோத்பூர்,
ராஜஸ்தானின் ஜோத்பூரில் கொடி மற்றும் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக நேற்று இரவு மோதல் வெடித்தது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அப்பகுதி முழுவதும் இணையதள சேவையை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
முன்னதாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட்டில் கொடி மற்றும் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஜலோரி கேட் சந்திப்பில் இந்துக் கொடியை அகற்றி முஸ்லீம் கொடியை நிறுவுவதில் தகராறு தொடங்கியது. ஜலோரி வட்டம் அருகே பேனர் வைக்கப்பட்டு, ஒலிபெருக்கி பொருத்தப்பட்டது.
தற்போது வெளியான தகவல்களின்படி, சுதந்திரப் போராட்ட வீரர் பால் முகுந்த் பிஸ்ஸாவின் சிலை மீது கொடி ஏற்றப்பட்டு, ஜலோரியில் உள்ள வட்டத்தில் ரமலான் தொடர்பான பேனர் கட்டப்பட்டதை அடுத்து, ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடி மற்றும் பேனரை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மற்ற சமூகத்தினர் ஆத்திரமடைந்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இரு சமூகத்தினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதனைத்தொடர்ந்து மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இந்த சம்பவம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், எந்த விலை கொடுத்தும் அமைதியையும் ஒழுங்கையும் பராமரிக்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்காக ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் தனது டுவிட்டரில், “ஜோத்பூர் ஜலோரி கேட்டில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. எந்த விலை கொடுத்தும் அமைதி மற்றும் ஒழுங்கை பராமரிக்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story