மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை நீக்க இன்றே கடைசி நாள்: எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே - தயார் நிலையில் போலீசார்!
சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்தால் அதைச் சமாளிக்க மராட்டிய மாநில காவல்துறையின் முழுப் படையும் எச்சரிக்கையாகவும் தயாராகவும் உள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த பேரணியில் பேசிய எம்என்எஸ் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, மே 3(இன்றுடன்) மசூதிகளில் மாட்டியிருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் அதன்பின்னர் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. அந்த
சம்பவங்களுக்கு நான் பொறுப்பாக மாட்டேன், ஒலிபெருக்கி சத்தம் ஒரு மதப் பிரச்சினை அல்ல, சமூகப் பிரச்சினை என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், ராஜ் தாக்கரேவின் காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், மராட்டிய மாநில டிஜிபி ரஜ்னிஷ் சேத், இன்று காலை அம்மாநில உள்துறை மந்திரி திலீப் வால்ஸ் பாட்டீலை சந்தித்தார். இருவரும், மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து, சட்டம்-ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்தனர்.
டிஜிபி ரஜ்னிஷ் சேத் கூறியதாவது;- “சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்தால் அதைச் சமாளிக்க மராட்டிய மாநில காவல்துறையின் முழுப் படையும் எச்சரிக்கையாகவும் தயாராகவும் உள்ளது.
ராஜ் தாக்கரேவின் சர்ச்சை பேச்சு குறித்து தேவைப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 87 கம்பெனி மாநில ரிசர்வ் போலீஸ் படையும் (எஸ்ஆர்பிஎப்), 30,000 ஊர்க்காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story