‘மத வழிபாட்டுத்தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றுங்கள்’ டெல்லி கெஜ்ரிவால் அரசுக்கு பா.ஜ.க. வலியுறுத்தல்
டெல்லியில் மத வழிபாட்டுத்தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று கெஜ்ரிவால் அரசை பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
மத வழிபாட்டுத்தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை இப்போது பல மாநிலங்களிலும் ஒலிக்கத்தொடங்கி உள்ளது. உ.பி.யில் மத வழிபாட்டுத்தலங்களில் இருந்து 46 ஆயிரம் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன.
மராட்டிய மாநிலத்தில் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை 3-ந்தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கெடு விதித்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் ஒலி மாசு உச்சம் தொட்டுள்ளது. ஒலிபெருக்கிகளால் வருகிற ஒலிமாசுவினால் டெல்லி மக்கள் அவதிப்படுகிறார்கள்.
ஒலிபெருக்கிகளால் மாணவர்கள், அறிஞர்கள், இதய நோயளிகள் என பல தரப்பினரும் பிரச்சினைக்குள்ளாகிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி மாநில அரசுகள், மதவழிபாட்டு தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பல மாநிலங்களும் ஒலிபெருக்கிகளை அகற்றி உள்ளன. இந்த வகையில் டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?.
இதுபற்றி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதி உள்ளேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி எல்லா மத வழிபாட்டுத்தலங்களில் இருந்தும் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும். இது சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினை ஆகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story