"எதிர்பாராத விதமாக இது போன்று நடக்கும்"- பாலியல் வன்கொடுமை குறித்து பெண் மந்திரி சர்ச்சை கருத்து


Image Courtesy : Screengrab from Youtube
x
Image Courtesy : Screengrab from Youtube
தினத்தந்தி 4 May 2022 6:00 PM IST (Updated: 4 May 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆந்திர மாநில மந்திரி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

குண்டூர்,

ஆந்திரப் பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ரெபல்லே டவுன் ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை கர்ப்பிணிப் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நாகயலங்காவுக்குச் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண்ணை 3 பேர்  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சந்தேகமுடைய மூன்று நபர்களும் கடந்த 1 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஒரு வாரத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த இரண்டாவது பாலியல் வன்கொடுமைச் சம்பவம் இதுவாகும். கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள குராசாலா ரயில் நிலையத்தில் தனது குழந்தையுடன் இருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது அந்த மாநிலத்தின் உள்துறை மந்திரி தனதி வனிதா இந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இந்த சம்பவங்களுக்கும் அரசு ரயில்வே காவல்துறை பணியாளர்கள் பற்றாக்குறையுக்கும்  தொடர்பு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தப் பெண்ணைத் தாக்கும் நோக்கத்துடன் ஸ்டேஷனுக்கு வரவில்லை . அவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர்.

கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அவர்கள் அந்த பெண்ணின் கணவனை சீண்டிய போது அந்தப் பெண் குறுக்கிட்ட போது அந்த சம்பவம் நடந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில விஷயங்கள் எதிர்பாராத விதமாக நடக்கும். இதற்கும், போலீசார்  பற்றாக்குறைக்கும் தொடர்பில்லை " என அவர் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story