ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி சுற்றுப்பயணம்
கேரளாவில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிட்டார். அங்கு வெற்றி வாய்ப்பை இழந்த ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார்.
அதன்பின்பு ராகுல் காந்தி அடிக்கடி கேரளா சென்று, வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். இப்போது அவரது தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வயநாடு தொகுதியில் உள்ள பழங்குடி இன மக்களை சந்தித்து பேசியதோடு, அவர்களின் குறைகளையும் ஸ்மிரிதி இராணி கேட்டறிந்தார்.
இங்கு மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை என்றும், குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சாட்டிய அவர், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
ராகுல் காந்தி வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி சுற்றுப்பயணம் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமேதியில் ராகுலை வீழ்த்திய ஸ்மிரிதி இராணி, வயநாட்டில் போட்டியிடுவாரா? என்று நிருபர்கள் கேட்ட போது, நான் அமேதியை விட்டு ஓடமாட்டேன், என்று ஸ்மிரிதி இராணி பதிலளித்தார்.
Related Tags :
Next Story