வங்கிக்கடன் வட்டி விகிதம் உயர்வு: வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும் அபாயம்..!!


வங்கிக்கடன் வட்டி விகிதம் உயர்வு: வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும் அபாயம்..!!
x
தினத்தந்தி 5 May 2022 6:39 AM IST (Updated: 5 May 2022 6:39 AM IST)
t-max-icont-min-icon

வங்கிக்கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.4 சதவீதம் உயர்த்தியது. இதனால், வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

மும்பை, 

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது.

ரிசர்வ் வங்கியின் பண கொள்கை குழு கூட்டம், திட்டமிடாத நிலையில் நேற்று நடந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமை தாங்கினார். அதில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகள் (0.4 சதவீதம்) உயர்த்தப்பட்டது.

அதாவது, கடன் வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு முதல்முறையாக இப்போதுதான் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

ரஷியா-உக்ரைன் போரால் பணவீக்கம் உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் 6.9 சதவீதமாக இருந்தது. ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கான 6 சதவீதத்தை தாண்டி, தொடர்ந்து 3 மாதங்களாக பதிவாகி வருகிறது. எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

வட்டி உயர்வால், வங்கிகளிடம் இருந்து பொதுமக்கள் பெற்ற வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரும் அபாயம் எழுந்துள்ளது. அப்படி உயர்ந்தால், கடனுக்கான மாதாந்திர தவணை தொகை (இ.எம்.ஐ.) அதிகரிக்கும்.

மேலும், வங்கிகள் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் தொகையின் அளவை 4 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. இந்த உயர்வு, 21-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Next Story