பீகாரில் 3 ஆயிரம் கி.மீ. பாதயாத்திரை: பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
புது எண்ணம், புது முயற்சியை கொண்டு வரும் நோக்கத்துடன் பிரசாந்த் கிஷோர் 3 ஆயிரம் கி.மீ. பாதயாத்திரை செல்கிறார்.
புதுடெல்லி,
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளை பலரும் உன்னிப்புடன் கவனித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய பரபரப்பு யூகத்திற்கு பதிலளிக்கும் வகையில் இன்று அவர் பேசியுள்ளார்.
தனது சொந்த மாநிலம் பீகாரில் புதிய திட்ட நடைமுறையை கொண்டு வருவதற்காக தன்னையே அர்ப்பணிப்பேன் என கூறியுள்ளார். வருகிற அக்டோபர் 2ந்தேதியில் இருந்து 3 ஆயிரம் கி.மீ. பாதயாத்திரை செல்வேன் என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, பீகாரில் சமீபத்தில் தேர்தல் எதுவும் இல்லை. அதனால், அரசியல் கட்சி என்பது தற்போது வரை எனது திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என கூறினார். இதனால், வருங்காலத்தில் ஒரு வேளை கட்சி ஆரம்பிப்பதற்கான கேள்விகளை விட்டு கிஷோர் சென்றுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, நான் பூஜ்யத்தில் இருந்து தொடங்க விரும்புகிறேன். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளை ஜன்-சுராஜ் (பொதுமக்களுக்கு நல்ல அரசாட்சி வழங்கும்) திட்டம் மக்களை சென்றடையும் வகையில் செலவிட போகிறேன் என கூறியுள்ளார்.
கிஷோர் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற யூகங்களை பொய்யாக்கும் வகையில், லாலு பிரசாத் மற்றும் நிதீஷ் குமார் இருவரின் ஆட்சியை விமர்சித்து உள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக பீகாரில் வளர்ச்சி இல்லை. நிலவி வரும் யூகங்களின்படி, அரசியல் கட்சி எதனையும் நான் இன்று அறிவிக்க போவதில்லை. பீகாரில் மாற்றம் கொண்டு வரவிரும்பும் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே எனது நோக்கம்.
வருங்காலத்தில், அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு ஏற்பட்டால், அதுபற்றி வருங்காலத்தில் முடிவு செய்வோம். அப்போது, அது பிரசாந்த் கிஷோரின் கட்சியாக இருக்காது. அது மக்களின் கட்சியாக இருக்கும்.
கடந்த சில மாதங்களில் நல்லாட்சியில் நம்பிக்கை கொண்டுள்ள 17 ஆயிரம் பேரை எனது குழு அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் 90 சதவீதத்தினர் பீகாருக்கு புதிய எண்ணம் தேவையாக உள்ளது என நம்புகின்றனர். என்னால் முடிந்தவரை தனிப்பட்ட முறையில் மக்களில் பலரை சந்திக்க முயற்சிப்பேன். நம்மிடம் வாக்குகள் இருந்து விட்டால், பணம் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரசுடனான பேச்சுவார்த்தை முற்று பெற்றது பற்றி கிஷோர் கூறும்போது, எனது திட்டப்படி செயல்பட அனைத்து விசயங்களிலும் அவர்கள் தீவிர கவனம் செலுத்தினர். அதன்படி செயல்பட கூட அவர்கள் ஒப்புதல் அளித்தனர்.
ஆனால், காங்கிரஸ் அமைப்பில் எந்த மதிப்பும் இல்லாத அதிகாரமளிக்கும் செயல் குழுவில் நான் சேர வேண்டும் என அவர்கள் விரும்பினர். அதனால் பேச்சுவார்த்தை முற்று பெற்று விட்டது என கூறியுள்ளார்.
பீகார் முதல்-மந்திரி நிதீஷை தனது தந்தை போன்றவர் என கூறிய கிஷோர், அதனால் எனக்கு தனியான அரசியல் பயணம் இருக்க முடியாது என்ற அர்த்தமில்லை என்றும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story