குஜராத்: சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பு


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 5 May 2022 3:39 PM IST (Updated: 5 May 2022 3:39 PM IST)
t-max-icont-min-icon

குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் வட்கம் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி. இவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.

இதற்கிடையில், ஜிக்னேஷ் கடந்த 2017 ஜூலை மாதம் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் போலீசார் அனுமதியின்றி ’விடுதலை பேரணி’ என்ற பெயரில் நடந்த பேரணியில் பங்கேற்றார். ஜிக்னேஷ் மேவானியின் ராஷ்டிரிய தலித் அதிகார் அமைப்பை சேர்ந்த சிலரும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து அனுமதியின்றி பேரணி நடத்தியதற்காக ஜிக்னேஷ் மேவானி உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.      

இந்நிலையில், இந்த வழக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி கூட்டம் கூடியது, பேரணி நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜிக்னேஷ் மேவானி உள்பட 10 குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கில் ஜிக்னேஷ் மேவானி உள்பட 10 பேருக்கு தலா 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது. தொடர்ந்து 10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி எந்நேரமும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story