மேற்கு வங்காளத்தில் 6 மிதக்கும் காவல் நிலையங்கள் அமித்ஷா திறந்து வைத்தார்


மேற்கு வங்காளத்தில் 6 மிதக்கும் காவல் நிலையங்கள் அமித்ஷா திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 6 May 2022 4:38 AM IST (Updated: 6 May 2022 4:38 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில், வங்காளதேச எல்லையை ஒட்டி ஆற்றில் 6 மிதக்கும் காவல் நிலையங்களை அமித்ஷா திறந்து வைத்தார்.

கொல்கத்தா, 

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்காளத்துக்கு சென்றார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு அவர் மேற்கு வங்காளத்துக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

கொல்கத்தா விமான நிலையத்தில் அவரை மத்திய உள்துறை இணை மந்திரி நிஷித் பிரமாணிக், மாநில பா.ஜனதா தலைவர் சுகந்த மஜும்தார், நந்திகிராம் பா.ஜனதா எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், ஹெலிகாப்டர் மூலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ஹிண்டால்கஞ்ச் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமுக்கு அமித்ஷா சென்றார். அவருடன் மேற்கண்ட 3 தலைவர்களும் உடன் சென்றனர்.

ஹிண்டால்கஞ்ச் முகாமுக்கு சென்ற அமித்ஷாவை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் வரவேற்றனர். ஹிண்டால்கஞ்சில் உள்ள ஆற்றில் படகுகளில் செயல்படும் 6 மிதக்கும் புறக்காவல் நிலையங்களை அமித்ஷா திறந்து வைத்தார்.

அந்த இடம் இந்திய-வங்காளதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. புறக்காவல் நிலையங்கள் மூலம் எல்லை கண்காணிப்பை வலுப்படுத்த முடியும் என்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறினார். இதுபோன்ற மிதக்கும் புறக்காவல் நிலையங்கள் படிப்படியாக இன்னும் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அங்கு ஒரு படகு ஆம்புலன்சை அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். எளிதில் நுழைய முடியாத சுந்தரவன காடுகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்க இந்த ஆம்புலன்ஸ் பயன்படும்.

பின்னர், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது:-

நம் நாட்டு எல்லைகளை ஊடுருவலும், கடத்தலும் நடக்காமல் பாதுகாப்பது நமது கடமை.

உள்ளூர் நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊடுருவலையும், கடத்தலையும் தடுப்பது கடினம். இருப்பினும், மக்களின் நிர்பந்தத்தால் அந்த ஒத்துழைப்பை உள்ளூர் அதிகாரிகளே தர வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். அத்தகைய அரசியல் சூழ்நிலை விரைவில் உருவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியாக 3-வது தடவையாக மம்தா பானர்ஜி கடந்த ஆண்டு இதே நாளில்தான் பதவி ஏற்றார். இதையொட்டி, மம்தா அரசின் ஓராண்டு கொண்டாட்டத்துக்கு மாநிலம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்பாடுகளை செய்திருந்தது.

Next Story