ஜூலை மாதத்துக்குள் 75 டிஜிட்டல் வங்கிகள் செயல்பட தொடங்கும்
பட்ஜெட்டில் அறிவித்தபடி, நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் ஜூலை மாதத்துக்குள் செயல்பட தொடங்கும் என்று தெரிகிறது.
புதுடெல்லி,
கடந்த பிப்ரவரி 1-ந்தேதி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். 75-வது சுதந்திர தின ஆண்டை குறிக்கும்வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த வங்கிகளை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை வகுப்பதற்காக ரிசர்வ் வங்கி அதிகாரி அஜய்குமார் சவுத்ரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு உதவ இந்திய வங்கிகள் சங்கத்தின் உயர் அதிகாரி சுனில் மேத்தா தலைமையில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டது.
டிஜிட்டல் வங்கிகள் அமைக்கப்பட வேண்டிய 75 மாவட்டங்களை பணிக்குழு தேர்வு செய்தது.
இந்தநிலையில், வருகிற ஜூலை மாதத்துக்குள் 75 மாவட்டங்களிலும் டிஜிட்டல் வங்கிகள் செயல்பட தொடங்கும் என்று தெரிகிறது. அதற்கேற்ப கடந்த மாதம், இந்த வங்கிகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இதுகுறித்து இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அனைத்து பொதுத்துறை வங்கிகளும், 10 தனியார் வங்கிகளும், ஒரு சிறு நிதி வங்கியும் ஜூலை மாதத்துக்குள் டிஜிட்டல் வங்கி தொடங்குவதற்கான பணிகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன.
வழிகாட்டு நெறிமுறைகளின்படி, டிஜிட்டல் வங்கிகள், வங்கிக்கிளைகளாக கருதப்படும்.
வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்த இந்த வங்கிகளுக்கு உரிமை உண்டு. அதே சமயத்தில், வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கொண்டிருக்க வேண்டும்.
கடன், டெபாசிட் ஆகிய இருதரப்பிலும் போதுமான இலக்கை எட்ட வேண்டும்.
Related Tags :
Next Story