அமித்ஷாவை வரவேற்க இருந்த பா.ஜ.க. இளைஞரணி துணை தலைவர் சடலமாக மீட்பு
மேற்கு வங்காளத்திற்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகையையொட்டி அவரை வரவேற்க இருந்த பா.ஜ.க. இளைஞரணி துணை தலைவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்திற்கு மத்திய மந்திரி அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவரை வரவேற்க வேண்டிய ஏற்பாடுகளை பா.ஜ.க. செய்தது.
இதன்படி, பைக்கில் பேரணியாக சென்று அமித்ஷாவை வரவேற்கவும் அக்கட்சி திட்டமிட்டு இருந்தது. இந்த பேரணியை கொல்கத்தாவின் பா.ஜ.க. இளைஞரணி துணை தலைவராக இருந்து வந்த அர்ஜுன் சவுராசியா என்பவர் தலைமையேற்று வழிநடத்தி செல்ல முடிவாகி இருந்தது.
இந்நிலையில் கொல்கத்தா நகரின் சித்பூர்-கொஸ்சிபூர் பகுதியில், அமித்ஷாவை வரவேற்க இருந்த பா.ஜ.க. வாலிபரின் உடல் பாழடைந்த கட்டிடம் ஒன்றின் மேற்கூரை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் திரண்டு விட்டனர். அவர்களில் ஒருவர் இது நிச்சயம் படுகொலை என தெரிவித்து உள்ளார். கொலை செய்த பின்னர் அவரை தூக்கில் தொங்க விட்டுள்ளனர். அவரது கால்கள் தரையை தொட்டபடி உள்ளன என கூறியுள்ளார்.
கொல்கத்தா பா.ஜ.க. இளைஞரணி துணை தலைவராக இருந்து வந்த சவுராசியா கட்சி பணியில் சுறுசுறுப்புடன் செயலாற்றி வந்துள்ளார். இதுபற்றி வடக்கு கொல்கத்தா மாவட்ட பா.ஜ.க. தலைவர் கல்யாண் சவுபே கூறும்போது, கொல்கத்தா வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை வரவேற்க 200 உறுப்பினர்களை கொண்ட பைக் பேரணியை சவுராசியா வழிநடத்தி செல்வது என நேற்றிரவு நாங்கள் முடிவு செய்திருந்தோம்.
ஆனால், கோஷ் பகன் ரெயில்வே யார்டில் உள்ள கட்டிடமொன்றில் இன்று காலை சவுராசியா உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு உள்ளார் என கூறியுள்ளார்.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டும் என பா.ஜ.க. குற்றச்சாட்டு கூறியுள்ளது. ஆனால், திரிணாமுல் காங்கிரசின் எம்.பி. சாந்தனு சென் கூறும்போது, இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. போலீசார் நடந்த சம்பவம் பற்றி விசாரிக்கட்டும் என கூறியுள்ளார்.
இந்நிலையில், சவுராசியாவின் குடும்பத்தினரை அமித்ஷா சந்திக்க இருக்கிறார். இதேபோன்று பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலியையும் அவருடைய வீட்டில் அமித்ஷா சந்தித்து பேச இருக்கிறார்.
Related Tags :
Next Story