நாமக்கல் பழங்குடியின கிராமங்களில் சாலை வசதி அமைக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 2 பழங்குடியின கிராமங்களில் சாலை வசதி அமைக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
நாமக்கல் மாவட்டம் போதிமலை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாமக்கல் கீழூரில் இருந்து வடுக மேலூர் வரையிலான 23 கி.மீ. தூரத்திற்கும், புதுப்பட்டியில் இருந்து கெடமலை வரையிலான 11 கி.மீ. தூரத்திற்கும் சாலை வசதி அமைக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த சாலைகளை அமைப்பதற்காக மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. இதன் பேரில் சுப்ரீம் கோர்ட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, வெட்டப்பட வேண்டிய மரங்கள் தொடர்பான அறிக்கையை கேட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அந்த குழு சமர்ப்பித்த அறிக்கையில், கீழூரில் இருந்து வடுக மேலூர் வரையிலான 23 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படும் சாலைக்காக 260 மரங்களையும், புதுப்பட்டியில் இருந்து கெடமலை வரையிலான 11 கி.மீ. தூரத்திற்கான சாலைக்காக 102 மரங்களை வெட்டவும் அனுமதி வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு வெட்டப்படும் மரங்களுக்கு நிகரான மரங்க்கன்றுகளை நடுவதற்கும், அதை பராமரிப்பதற்கும் அறிவுறுத்தல்களை வழங்கலாம் என அந்த குழு சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இந்த பழங்குடியின கிராமங்களுக்கு உடனடியாக சாலைகளை அமைக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இந்த கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அங்கு சாலைகளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story