மர பொந்தில் துணை... பல மாதங்களாக உணவு கொண்டு வரும் பறவை; வைரலான வீடியோ


மர பொந்தில் துணை... பல மாதங்களாக உணவு கொண்டு வரும் பறவை; வைரலான வீடியோ
x
தினத்தந்தி 6 May 2022 7:10 PM IST (Updated: 6 May 2022 7:29 PM IST)
t-max-icont-min-icon

மர பொந்து உள்ளே பல மாதங்களாக இருக்கும் துணைக்கு ஆண் பறவை உணவு கொண்டு வந்து தரும் வீடியோ வைரலாகி வருகிறது.


புதுடெல்லி,



இந்தியாவில் ஹான்பில் எனப்படும் மிக பெரிய, வளைந்த அலகுடைய பறவையினம் வசித்து வருகின்றது.  நாட்டில், சாம்பல் நிறம் உள்ளிட்ட 9 இனங்கள் காணப்படுகின்றன.  தனது இணை தவிர்த்து வேறு இணையை தேடாது.  தனது இணையுடனேயே வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழும்.

சில சமூகங்களில், இந்த வகை பறவைகள் தங்களது வீடுகளுக்கு மேல் பறந்து சென்றாலோ அல்லது வீடுகளுக்கு வருகை தருகிறது என்றாலோ அது அதிர்ஷ்டம் தரும் என எண்ணுகின்றனர்.

இந்த பறவையின் வாழ்க்கை முறை பற்றிய வீடியோ ஒன்றை இந்திய வன பணியின் உயரதிகாரியான பர்வீன் கஸ்வான் வெளியிட்டு உள்ளார்.  அந்த வீடியோவில், மரம் ஒன்றின் பொந்தில் பெண் பறவை ஒன்று அமர்ந்து உள்ளது.

அதற்கு, ஆண் பறவை பழத்தின் ஒரு பகுதியை உணவாக கொண்டு வந்து ஊட்டுகிறது.  இந்த காட்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது.  இந்த வகை பறவைகளில், கூடு ஒன்றை பெண் பறவை தேர்வு செய்த பின் அதனை ஆண் பறவை மூடி விடும்.  அந்த கூட்டுக்குள்ளேயே பல மாதங்களாக பெண் பறவை வசித்து வரும்.

அதற்கு ஆண் பறவை உணவு கொண்டு வந்து தரும்.  இதுபோன்று, 3 முதல் 4 மாதங்கள் வரை உணவு தேடி கொண்டு வருவது ஆண் பறவையின் வேலை.  கூட்டுக்குள் குஞ்சுகள் பொறித்ததும், அதற்கும் சேர்த்து ஆண் பறவை இரை தேட வேண்டும்.

இதற்காக, காடுகளில் இரையை தேடி அலையும்.  மனிதர்களின் வாழ்க்கை முறையால், குரங்கு உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவையினங்ளின் வாழ்வாதாரங்களில் முக்கிய பகுதியான வன பரப்பு பெருமளவில் சுருங்கி வருகிறது.

எனினும், ஆண் பறவை இரையை சேகரித்து வந்து தனது குடும்பத்துக்கு வழங்கும்.  அதன் குஞ்சுகள் வளர, வளர இரை தேடும் வேலை அதிகரிக்கும்.  அடிக்கடி வெளியே சென்று இரையை கொண்டு வரும்.  இது, ஆண் பறவையின் தினசரி பணி.  ஒரு நாளில் பலமுறை கூட உணவு தேடி அலைய வேண்டும்.  இரையை தானும் உண்டு, குடும்பத்துக்கும் கொண்டு சேர்க்கும் பணியை செய்ய வேண்டும்.

இதில், எல்லா பழங்களும் குஞ்சுகளுக்கு சென்று சேர்வதில்லை.  பழங்களை கொடுக்கும்போது, சில நிலத்தில் விழுந்து விடும்.  இதனால், பழங்களை ஆண் பறவை முதலில் விழுங்கி விடும்.  பெருமளவில் கூட்டுக்கு அருகிலேயே ஆண் பறவை இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஆண் பறவை இரையுடன் திரும்பி வராவிட்டாலோ அல்லது வேட்டையாடப்பட்டாலோ, அதற்காக கூட்டின் வாயிலில் காத்திருக்கும் அதன் குடும்பம் மரண வாயிலையே சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் பலவித பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.  குடும்பத்தின் மீது அதிக கவனம் எடுத்து கொண்டு செயல்படும் ஆண் பறவையை பார்த்து பலர் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.

வாழ்நாள் முழுவதும் ஜோடியை பிரியாமல் இருக்கும் அதன் பண்பை கண்டு சிலர் வியப்பு தெரிவிக்கின்றனர்.  அவற்றிடம் இருந்து மனிதர்கள் கற்று கொள்ள வேண்டும் என சிலர் தெரிவித்து உள்ளனர்.


Next Story