ஜோத்பூர் வன்முறை: இன்று 8 மணிநேரம் ஊரடங்கு தளர்வு..!
ஜோத்பூரில் இன்று ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் 8 மணி நேரம் தளர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோத்பூர்,
ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின்போது, மதம் சார்ந்த கொடிகளை ஏற்றிய நிலையில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து நடந்த கல்வீச்சு தாக்குதலில் 5 போலீசார் காயமடைந்தனர்.
தொடர்ந்து சமூக வலை தளங்களில் வதந்திகள் பரவியதன் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது.
மக்கள் அமைதியையும், நல்லிணக்கமும் காக்க வேண்டும் என முதல்-மந்திரி கேட்டு கொண்டார். இதன் ஒரு பகுதியாக ஜோத்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவை மே 8 நள்ளிரவு வரை நீட்டித்து மாவட்ட காவல் ஆணையாளர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
எனினும், ரைகாபா பேலஸ் பேருந்து நிறுத்தம் மற்றும் ரைகாபா ரெயில்வே நிலையம் இதில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு செல்ல கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஊரடங்கில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மருத்துவ சேவை, வங்கி அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் ஊடக பணியாளர்களுக்கு விலக்களிக்கப்பட்டு உள்ளது. செய்தித்தாள் விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட உதவி காவல்துறை ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஊரடங்கு உத்தரவின் போது வெளியே செல்ல அனுமதி வழங்க முடியும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜோத்பூரில் இன்று ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் 8 மணி நேரம் தளர்வு வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜோத்பூர் காவல்துறை வெளியிட்ட உத்தரவில், "மே 8-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரம் தளர்வு அளிக்கப்படும். பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேல் ஆட்கள், கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story