நடிகை தாக்கப்பட்ட வழக்கு: விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கு போலீசார் நோட்டீஸ்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு காவ்யா மாதவனுக்கு கேரள குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கொச்சி,
பிரபல நடிகை ஒருவர் 2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு சில கும்பல்களால் அந்த நடிகை இரண்டு மணிநேரம் காரில் வைத்து தாக்கப்பட்டார் எனவும், பின்னர் முழுச் சம்பவத்தையும் படம்பிடித்து நடிகையை மிரட்டினர் என்றும் தெரிய வந்தது. அந்த வழக்கின் விசாரணை இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளாது.
2017ஆம் ஆண்டு நடிகை தாக்கப்பட்ட வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில், நடிகை தாக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு மலையாள நடிகையும் நடிகர் திலீப்பின் மனைவியுமான காவ்யா மாதவனுக்கு கேரள குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அவரை விசாரிக்க குற்றப்பிரிவு நோட்டீஸ் அனுப்புவது இது இரண்டாவது முறையாகும். இந்த வழக்கில் காவ்யாவின் கணவரும், சக நடிகருமான திலீப் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார்.
ஆலுவாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து விசாரிக்கலாம் என காவ்யா குற்றப்பிரிவு போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு போலீசார் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உயிர் பிழைத்த நடிகைக்கும், அந்த நடிகருக்கும் இடையே இருந்த முன்விரோதம் தான் 2017 தாக்குதலுக்கு வழிவகுத்தது என்று விசாரணையின்போது திலீப்பின் மைத்துனர் அதிகாரிகளிடம் முன்பு கூறியிருந்தார். ஆகவே, இந்த வழக்கில் நடிகை காவ்யாவின் அறிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அந்த நடிகைக்கும், நடிகர் திலீப்புக்கும் அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியருக்கும் இடையே நிதி மற்றும் ரியல் எஸ்டேட் பேரங்கள் ஏதேனும் உள்ளதா என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story