டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு - புல்டோசர் முன் அமர்ந்து எம்.எல்.ஏ தர்ணா


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 9 May 2022 1:08 PM IST (Updated: 9 May 2022 1:08 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர் கொண்டு வரப்பட்டதால் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் பொதுஇடங்கள் ஆக்கிரமித்து குடியிருப்புகள், கடைகள் என பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்காக புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டன.

ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமதுல்லா கானும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டார்.

எம்.எல்.ஏ. அமதுல்லா கான் அதிகாரிகள் கொண்டு வந்த புல்டோசர் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கான், எனது கோரிக்கையை ஏற்று இப்பகுதி மக்கள் ஆக்கிரமித்த இடத்தில் இருந்து விலகிவிட்டனர். இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்திற்கு வெளியே இருந்த கழிவறை மற்றும் உடல் சுத்தம் செய்யும் அறை போலீஸ் முன்னிலையில் அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இல்லாதபோது, அவர்கள் (போலீஸ், அதிகாரிகள்) ஏன் இங்கு வரவேண்டும்? என்றார்.    

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் டெல்லி ஷாங்கீன்பாக் போராட்டம் நாட்டின் பல பகுதிகளில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story