பண மோசடி வழக்கில் கைது ஆவதை தவிர்க்க இறந்தது போல் நாடகம் ஆடியவர் பிடிபட்டார்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 9 May 2022 11:17 PM GMT (Updated: 9 May 2022 11:17 PM GMT)

மத்தியபிரதேசத்தில் பண மோசடி வழக்கில் கைது ஆவதை தவிர்க்க இறந்தது போல் நாடகம் ஆடியவர் பிடிபட்டார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் சாதர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில் நாம்தியோ (வயது 34). வாடகை வண்டி ஓட்டுனரான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு இடத்தில் இரும்பு கம்பிகளை வினியோகித்து விட்டு, அதற்கான பணம் ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்தை வாங்கிக்கொண்டார். 

இரும்பு கம்பிகளை அனுப்பிய சுதிர் அகர்வால் என்ற வியாபாரியிடம் அந்த பணத்தை ஒப்படைக்காமல் தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக சுதிர் அகர்பால், போலீசில் புகார் செய்தார். ஓரிரு நாளில், அந்த வாகனம் கேட்பாரற்று கிடந்தநிலையில் கைப்பற்றப்பட்டது. 

ஒரு வாரம் கழித்து, அதே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு அடையாளம் தெரியாத உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சுனில் நாம்தியோ குடும்பத்தினர் நேரில் பார்த்து, அது சுனில் நாம்தியோ தான் என்று அடையாளம் காட்டினர். பிறகு அந்த உடலுக்கு இறுதிச்சடங்குகளை செய்தனர்.

ஆனால், மரபணு சோதனையில், இறந்தவரின் மரபணு, சுனில் நாம்தியோ குடும்ப உறுப்பினர்களுடன் ஒத்துப்போகவில்லை. இதுதொடர்பான விசாரணை நிலுவையில் இருக்கும்போது, கடந்த 3-ந் தேதி, சுதிர் அகர்வால் ஒரு கோவிலுக்கு செல்லும்வழியில், சாதர்பூர் அருகே சுனில் நாம்தியோ உயிருடன் நடமாடுவதை பார்த்துவிட்டார். 

அவரிடம் பணத்தை கேட்டபோது, "போலீஸ் ஆவணங்களின்படி, நான் இறந்து விட்டவன்" என்று கூறி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சுதிர் அகர்வால் மீண்டும் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, சுனில் நாம்தியோவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மட்டும் மீட்கப்பட்டது.

Next Story