கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக அதிகரித்த சில்லறை வணிக பணவீக்கம்..!


image courtesy: ANI
x
image courtesy: ANI
தினத்தந்தி 12 May 2022 8:39 PM IST (Updated: 12 May 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் சில்லறை வணிக பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

எரிபொருள் மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வால் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் சில்லறை வணிக பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில் அதிகபட்சமாக 8.33 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது ஏப்ரல் 2022-ல் அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் கடுமையாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரலில் பதிவு செய்யப்பட்ட 4.23 சதவீதத்தை விட கிட்டதட்ட இரண்டு மடங்கு உயர்வாகும்.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் கிராமப்புறங்களில் கடந்த மாதத்தில் 7.66 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 8.38 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2021 ஏப்ரலில் 3.75 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் நகர்ப்புறங்களில் கடந்த மார்ச் மாதத்தில் 6.12 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.  2021 ஏப்ரலில் 4.71 சதவீதமாக இருந்தது. கடந்த மாதத்தில் 7.68 சதவீதமாகவும், 2021 ஏப்ரலில் 1.96 சதவீதமாகவும் இருந்த உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 8.38 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Next Story