பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ரகசிய தகவல்கள் விற்பனை: இந்திய விமானப்படை வீரர் கைது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 May 2022 2:32 AM IST (Updated: 13 May 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ரகசிய தகவல்களை பணத்துக்கு விற்ற இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி, 

டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை பதிவேடு அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தவர் தேவேந்தர் நாராயணன் சர்மா (வயது 32). சார்ஜண்ட் அந்தஸ்தில் இருப்பவர்.

இவரிடம் பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளி ஒருவர், ‘வாட்ஸ்அப்’ மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இருவரும் சமூக வலைத்தளம் மூலம் பழகி வந்தனர். சர்மாவை ஆசைவார்த்தைகளால் அப்பெண் தனது வலையில் வீழ்த்தினார்.

ஒருகட்டத்தில், இந்திய விமானப்படை அதிகாரிகள் பணியாற்றும் இடங்கள், ரேடார்கள் பொருத்தப்பட்ட இடங்கள், பாதுகாப்பு நிலையங்கள் போன்ற தேசபாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கியமான, ரகசிய தகவல்களை அந்த பெண் உளவாளி கேட்டார்.

அந்த தகவல்களை கம்ப்யூட்டரில் இருந்தும், கோப்புகளில் இருந்தும் தேவேந்தர் நாராயணன் சர்மா எடுத்தார். பிறகு ‘வாட்ஸ்அப்’ மூலம் அப்பெண்ணுக்கு அனுப்பி வைத்தார்.

பதிலுக்கு சர்மா மனைவியின் வங்கிக்கணக்கில் பாகிஸ்தான் தரப்பு பணம் போட்டது.

இந்த தகவல்கள் அம்பலமான நிலையில், தேவேந்தர் நாராயணன் சர்மா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். எலெக்ட்ரானிக் சாதனங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் சிக்கின.

சர்மா கடந்த 6 மாதங்களாக ரகசிய தகவல்களை அளித்து வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் பெண் உளவாளி, இந்திய சிம்கார்டை பயன்படுத்தியதாகவும், அதை பின்னர் செயலிழக்கச் செய்து விட்டதாகவும் தெரிய வந்தது.

சர்மா மீது அரசாங்க ரகசிய சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அவரிடம் ராணுவ உளவுப்பிரிவினரும், டெல்லி போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதேபோல் ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு அளித்ததாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story