டெல்லி தீ விபத்து: 28 பேர் மாயம் என புகார்; சம்பவ பகுதிக்கு கெஜ்ரிவால் நேரில் வருகை
டெல்லியில் 4 அடுக்கு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார்.
புதுடெல்லி,
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 4 மாடி வணிக கட்டிடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி கொண்டனர். 20 பேர் உயிரிழந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.
கட்டிடத்தில் இருந்து சுமார் 50 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என டெல்லி சுகாதார துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் சமீர் ஷர்மா கூறுகையில், இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார்.
தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லியில் 4 அடுக்கு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்திற்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் வேதனை தெரிவித்து உள்ளார். அவர் சம்பவம் நடந்த முண்ட்கா பகுதிக்கு இன்று காலை 11 மணியளவில் நேரில் சென்று பார்வையிடுகிறார். அவருடன் டெல்லி சுகாதார துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் உடன் செல்ல இருக்கிறார்.
கட்டிடத்தில் இருந்து வெளியேற ஒரே ஒரு வழியே இருந்தது உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. 28 பேரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணி தொடருகிறது. இதுபற்றி அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story