கொரானாவுக்கு பிறகு 30 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்குத் வரவில்லை - ஒடிசா அரசு


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 14 May 2022 2:52 PM GMT (Updated: 2022-05-14T20:22:57+05:30)

கொரானாவுக்கு பிறகு 30 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்குத் வரவில்லை என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

புவனேஸ்வர்,

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்றன. 

கொரோனா தொற்று குறையத் தொடங்கிய பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களிலும்  பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், மாணவ, மாணவிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில், சுமார் 30 சதவீத  மாணவர்கள் பள்ளிக்கு திரும்பவில்லை என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட கல்வி அதிகாரிகள் வழங்கிய பள்ளிகளின் தினசரி வருகை தரவை பகுப்பாய்வு செய்ததில், சுமார் 70 சதவீத மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்துகொள்வது தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையில் பள்ளிக்கு திரும்பாத 30 சதவீத மாணவர்களை திரும்ப அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர்களுக்கு, பள்ளி மற்றும் வெகுஜன கல்வித் துறை செயலாளர் பிபி சேதி எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக, மல்கனகிரி, பௌத், கஜபதி, சம்பல்பூர் மற்றும் நுவாபாடா போன்ற மாவட்டங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வருகை மாநில சராசரியை விட குறைவாக உள்ளது. இதேபால், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வரையிலான மாணவர்களின் வருகையைப் பொருத்தவரை மோசமாக உள்ளது.

மேல்நிலைப் பிரிவில், கஜபதி, போலங்கிர், பர்கர், சோனாபூர், நுவாபாடா, கட்டாக், கோர்தா, கோராபுட், கஞ்சம், பௌத், மல்கங்கிரி, கியோஞ்சர், சம்பல்பூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகை மாநில சராசரியை விட குறைவாக உள்ளது. மேலும் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பல மாணவர்கள், 9 ஆம் வகுப்பில் சேரவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபி சேதி எழுதிய கடிதத்தில், வகுப்புகளுக்கு வராத மாணவர்களை பட்டியலிட பள்ளி அளவிலான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர்களை அவர் கேட்டுக் கொண்டார். மேலும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள இளநிலை ஆசிரியர்களை பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு அனுப்பி, அவர்கள் பள்ளிக்கு வராததற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பள்ளிக்கு அனுப்புவதற்கு ஊக்குவித்து, மாணவர்களை பள்ளிக்கு வருவதால் கிடைக்கும் இலவச புத்தகங்கள், இலவச சீருடை, மதிய உணவு, கல்வி உதவித்தொகை போன்ற நன்மைகள் குறித்து விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story