விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் அடுத்த கட்ட போராட்டம்; தலைவர்களுடன் சோனியா ஆலோசனை


விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் அடுத்த கட்ட போராட்டம்; தலைவர்களுடன் சோனியா ஆலோசனை
x
தினத்தந்தி 14 May 2022 6:02 PM GMT (Updated: 2022-05-14T23:32:49+05:30)

விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து உதய்பூரில் தலைவர்களுடன் சோனியா ஆலோசனை நடத்தினார்.

உதய்பூர் மாநாட்டில் முக்கிய அமர்வு

இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடு அடுத்த நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. அதை எதிர்கொள்வதற்கும், தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ள கட்சிக்கு புத்துயிரூட்டவும் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாட்டினை ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் நடத்தி வருகிறது. இந்த மாநாட்டின் 2-வது நாளான இன்று, பெருகிவரும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மத்திய அரசின் தவறான கொள்கைகள் குறித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்தி மக்களிடம் எடுத்துச்செல்வதற்கான வழிவகைகள் குறித்து ஆராயும் முக்கிய அமர்வு நடந்தது.

கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த அமர்வில் கட்சி பொதுச்செயலாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ராகுல் அழைப்பு

கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த அமர்வில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டத்தை திட்டமிடுமாறு அழைப்பு விடுத்தார்.

பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் படும் துயரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி கடந்த நவம்பர் 14-ந்தேதி முதல் ‘ஜன் ஜாக்ரன் அபியான்' என்ற பெயரில் போராட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த போராட்டத்தின் 2-வது கட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.

Next Story