இந்தியா- நேபாளம் இடையேயான உறவு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி


இந்தியா- நேபாளம் இடையேயான உறவு ஈடு இணையற்றது:  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 May 2022 11:54 AM GMT (Updated: 15 May 2022 12:31 PM GMT)

நேபாளம் செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு பிரதமர் ஷேர்பகதூர் தேவுபாவை சந்திக்க உள்ளாா்.

புதுடெல்லி, 

புத்தா் பிறந்த தினமானது புத்த பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க நேபாளம் வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ஷேர்பகதூர் தேவுபா அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை  நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா். அங்கு புத்த ஜெயந்தி தினவிழாவில் பங்கேற்கும் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவையும் சந்தித்து பேசுகிறார். 

லும்பினி வளர்ச்சி அறக்கட்டளை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறாா். புத்த மத கலாச்சார பாரம்பரிய மையத்திற்கு, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறாா்.

இந்த பயணம் குறித்து பிரதமா் மோடி கூறுகையில், நேபாளத்துடனான இந்தியாவின் நட்புறவு ஈடு இணையற்றது. இரு நாடுகளுக்கு இடையிலான நாகரீகம் மற்றும் மக்கள் தொடர்புகள் ஆகியவற்றில் நெருங்கிய நட்புறவு உள்ளது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்காக நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்கிறேன். 

புத்த ஜெயந்தியை முன்னிட்டு மாயாதேவி கோவிலில் பிரார்த்தனை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். லும்பினி மடாலயத்தில் உள்ள புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையத்தின் 'ஷிலான்யாஸ்' விழாவில் நான் பங்கேற்பேன்" என்று மோடி கூறினார்.

நேபாளம் செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு பிரதமர் ஷேர்பகதூர் தேவுபாவை சந்திக்க உள்ளாா். நீர்மின்சாரம், மேம்பாடு மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனா்.

பிரதமர் மோடி நேபாளத்துக்கு பயணம் செய்வதை அடுத்து, இந்திய நேபாள எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளம் செல்லும் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமராக பதவியேற்று ஐந்தாவது முறையாக நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

Next Story