பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் பொறுப்பு; சீக்கியர்கள் படுகொலைக்கு இந்தியா கண்டனம்!


பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் பொறுப்பு; சீக்கியர்கள் படுகொலைக்கு இந்தியா கண்டனம்!
x
தினத்தந்தி 15 May 2022 3:30 PM GMT (Updated: 15 May 2022 3:30 PM GMT)

பாகிஸ்தானில் சீக்கிய வர்த்தகர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரில் இன்று பட்டப்பகலில் இரண்டு சீக்கியர்கள் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்த கொலைவெறி தாக்குதலில்,  42 வயதான சுல்ஜீத் சிங் மற்றும் 38 வயதான ரஞ்சீத் சிங் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் படலால் பகுதியில் மசாலாக் கடைகளை வைத்திருந்தனர். இன்று காலை அவர்கள் கடையில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு  நபர்கள் அவர்களை சுட்டுக் கொன்றனர்.தலைமறைவான சந்தேக நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இன்று கொல்லப்பட்டதற்கு, பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இந்தியா "கடுமையான எதிர்ப்பை" பதிவு செய்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற சம்பவம் நடப்பது முதல்முறை அல்ல. மேலும் இது அரிதான நிகழ்வு அல்ல. இது ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் வருந்தத்தக்க சம்பவம்" எனத் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

“பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரை தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு, பாகிஸ்தான் அரசிடம் எங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். இவ்விஷயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

பாகிஸ்தான் அரசாங்கம் அதன் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கவனிப்பதன் மூலம் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.பாகிஸ்தான் அரசு தனது பொறுப்புகளை நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் கைது செய்யப்பட்டு, ஒரு முன்மாதிரியான தண்டனை வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர்  தெரிவித்தார்.

பாகிஸ்தான் நாட்டில்  சிறுபான்மையினரின் படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் சூழலில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.  2017 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் இந்துக்கள் மிகப்பெரிய மத சிறுபான்மையினராக உள்ளனர். அதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள குறிப்பிடத்தக்க மத சிறுபான்மையினரில் சீக்கியர்கள், அஹ்மதியர்கள் மற்றும் பார்சிகளும் உள்ளனர்.

Next Story