குஜராத்தில் வானில் இருந்து விழுந்த உலோக பந்துகள்; கிராம மக்கள் அதிர்ச்சி


குஜராத்தில் வானில் இருந்து விழுந்த உலோக பந்துகள்; கிராம மக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 17 May 2022 10:15 AM IST (Updated: 17 May 2022 10:15 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் வானில் இருந்து விழுந்த உலோக பந்துகள் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.





வதோதரா,


குஜராத்தின் சுரேந்திராநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சாய்லா கிராமத்தில் திடீரென வானில் இருந்து உலோக பந்து ஒன்று வந்து விழுந்துள்ளது.  அந்த பந்தின் உலோக சிதறல்களும் வயல்வெளியில் கிடந்துள்ளன.  இதனால், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதேபோன்று, கேடா மாவட்டத்தின் உம்ரெத் மற்றும் நாடியாட் நகரங்களில் கருப்பு மற்றும் வெள்ளி வண்ணத்திலான உலோக பந்துகள் கடந்த 3 நாட்களாக வந்து விழுந்துள்ளன.  ஆனந்த் மாவட்டத்தின் 3 கிராமங்களிலும் இதுபோல் நடந்துள்ளன.

இதனை தொடர்ந்து அந்த விசித்திர நிகழ்வு பற்றி ஆய்வு செய்ய குஜராத்தில் உள்ள இயற்பியல் ஆய்வு கூடம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆய்வு கூடம், விண்வெளி அறிவியல் பற்றி ஆய்வு செய்யும் விண்வெளி துறையின் கீழ் செயல்பட கூடிய மாநில அமைப்பு ஆகும்.  ஆய்வு கூடத்தின் ஆரம்பகட்ட ஆய்வில், அவை செயற்கைக்கோள் ஒன்றின் உடைந்த பொருட்கள் என தெரிய வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், மராட்டியத்தின் சந்திராபூரில் சிந்தேவாஹி தாலுகாவுக்கு உட்பட்ட லட்போரி மற்றும் பவன்பூர் கிராமங்களில் இரவு நேரத்தில் 2 உலோக பொருட்கள் பலத்த சத்தத்துடன் வந்து விழுந்துள்ளன.

இதனால், அச்சமடைந்த கிராமவாசிகள் தங்களது வீட்டுக்குள் ஓடி, ஒளிந்து கொண்டனர்.  ஒரு சிலர் அரை மணிநேரம் வரை வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.

அந்த பொருட்களில், 3 மீட்டர் சுற்றளவு (10க்கு 10 அடி) கொண்ட வளையம் ஒன்று இருந்துள்ளது.  இதேபோன்று, கோள வடிவிலான மற்றொரு பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.  வளையம் சூடாகவும் இருந்துள்ளது.

அதற்கு முன்பு, நாக்பூர் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் வானத்தில் இருந்து விண்கற்கள் மழை பொழிந்தது போன்ற காட்சிகள் வீடியோவுடன் வெளிவந்தது.

இதேபோன்று, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திலும் தொடர்ச்சியாக பொருட்கள் ஒளிர்ந்து கொண்டே வந்த காட்சியை பார்த்தோம் என மக்கள் அப்போது கூறினர்.  அந்த 2 உலோக பொருட்களும் சீன ராக்கெட்டின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என அப்போது இஸ்ரோ அமைப்பு தெரிவித்து இருந்தது.


Next Story