கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை துபாயில் இருந்து மங்களூருவுக்கு ரூ.1½ கோடி தங்கம் கடத்தல்
துபாயில் இருந்து மங்களூருவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
மங்களூரு;
சர்வதேச விமான நிலையம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும், சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு கடத்தி வரப்படும் தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
தங்கம் கடத்தல்
இந்த நிலையில் தங்கம் கடத்தல் குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த மாதம்(அக்டோபர்) 22-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை துபாயில் இருந்து ஏராளமான விமானங்கள் வந்தன. அந்த விமானங்களில் வந்திறங்கிய பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களது உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவல்களின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
ரூ.1 கோடியே 46 லட்சத்து...
அந்த சோதனையின்போது சந்தேகப்படும் படியாக வந்த 6 பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தோம். அப்போது அவா்கள் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ 870 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 46 லட்சத்து 87 ஆயிரத்து 410 ஆகும். அந்த 6 பயணிகள் மீதும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.