தாலுகா அளவில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை
மழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க தாலுகா அளவில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும் என்று கலெக்டர் கோபாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மண்டியா:-
ஆலோசனை கூட்டம்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மண்டியா மாவட்டத்தில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கோபாலகிருஷ்ணா நேற்று தனது அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் அதிகாரிகள் முன்னிலையில் கலெக்டர் கோபாலகிருஷ்ணா பேசியதாவது:-
வரலாறு காணாத மழை
மண்டியா மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் அதிகளவு சேதம் ஏற்பட்டது. அப்போது எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது. இனிமேலும் அதுபோன்று நடக்கக்கூடாது. பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதனால், இப்போதே நாம் தயாராக இருக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
அரசு பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி கட்டிடங்கள், பாலங்கள் சிதிலமடைந்து இருந்தால் அதனை சீரமைக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு அறை
மழை பாதிப்புகள் குறித்து மக்கள் தகவல் அளிக்க ஒவ்வொரு தாலுகா அளவிலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை திறக்க வேண்டும். மண்டியா மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட குறைவான மழையே பெய்துள்ளது. சில பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. சில இடங்களில் மழை பெய்துள்ளதால் விதைப்பு பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இதனால் உரங்கள், விதைகள் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.