பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்; 25 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்கியது


பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்; 25 மணிநேர கவுண்ட்டவுன்  தொடங்கியது
x

சிங்கப்பூர் நாட்டு செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டுக்கு 25 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்கியது

சென்னை,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் பொறுத்தப்பட்டு உள்ள சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 3 செயற்கைகோள்கள் குறிப்பிட்ட இலக்கில் விண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது.

இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதில் முதன்மை செயற்கை கோளான டி.எஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. வண்ண புகைப்படம் எடுக்கும் திறன் உடையது. மேலும் நியூசர் செயற்கை கோள் 155 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர்ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும் தன்மை கொண்டது.

மேலும் இதனுடன் கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இது 2.8 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைகோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பிறகு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் இறுதி பாகமான பி.எஸ்.4 எந்திரம் உதவியுடன் சில ஆய்வுக் கருவிகளும் வலம் வர உள்ளன.


Next Story