இஸ்லாமிய மாணவனை 'பயங்கரவாதி' எனக் கூறிய பேராசிரியர் இடை நீக்கம்
கர்நாடகா மாநிலம் மணிப்பாலில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில் இஸ்லாமிய மாணவனை பயங்கரவாதி என அழைத்த பேராசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் மணிப்பாலில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில் இஸ்லாமிய மாணவனை பயங்கரவாதி என அழைத்த பேராசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.மணிபால் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் வகுப்பறையில் உள்ள மாணவனை பேராசிரியர் ஒருவர் பயங்கரவாதி என அழைத்துள்ளார். மாணவனின் பெயரை கேட்ட பேராசிரியர் மாணவன் இஸ்லாமியர் என அறிந்த பின் அந்த மாணவனை பயங்கரவாதி என அழைத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் எப்படி என்னை பயங்கரவாதி என்று நீங்கள் அழைக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு பேராசிரியர் விளையாட்டாக அழைத்ததாகவும் நீ என் மகன் போலவும் தெரிவித்து உள்ளார்.
ஆனால் கோவமடைந்த மாணவன் இந்த நாட்டில் இஸ்லாமியனாக இருப்பதும் இது போன்ற பிரச்சினையை சந்திப்பதும் விளையாட்டு இல்லை, உங்கள் மகனை பயங்கரவாதி என்று அழைப்பீர்களா என்னை மட்டும் ஏன் அப்படி அழைக்கிறீர்கள். நீங்கள் ஒரு பேராசிரியர் பாடம் எடுக்கும் இடத்தில் இருக்கிறீர்கள் என பேராசிரியருக்கு அந்த மாணவன் வகுப்பு எடுத்தான்.இதனை தொடர்ந்து அந்த பேராசிரியர் மாணவனிடம் மன்னிப்பு கோரினார் ஆனால் அந்த மாணவன் மன்னிப்பு கேட்பது இந்த மாதிரியான சீர்கேட்டை எந்த வகையிலும் சரி செய்யாது என உறக்க கூறினார். இந்த உரையாடல் வீடியோ சமுக வளைதளத்தில் வைரலானதை அடுத்து மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது. இதனை அடுத்து அந்த பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் பணி இடை நீக்கம் செய்து உள்ளது.